ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம்

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரின் வேண்டுகோளுக்கிணங்க சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று(18) ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தார்.

 

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் அல்ஹாஜ். எம். எஸ். நழீம், உறுப்பினர் எம்.ஆர் நஸீர், கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், வைத்தியர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதன்போது ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் அல்ஹாஜ். எம். எஸ். நழீம் தான் பாராளுமன்ற உறுப்பினாராக இருந்தபோது தொடர்ந்தேர்ச்சியாக மேற்கொண்ட முயற்சி, ஏறாவூர் சமூக ஆர்வலர்களின் நீண்டநாள் பிரயத்தனத்தின் பலனாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக மகப்பேற்று நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வைத்தியசாலைக்கு ஒரு இரத்த வங்கி அவசரமாகத் தேவைப்படுவதாகவும், சிறுநீரக நோயாளிகளுக்கான இரத்த சுத்திகரிப்பு, சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளும் வகையில் அதற்குத் தேவையான ஆளணிகளைப் பெற்றுத் தந்துதவுமாறும் கேட்டுக்கொண்டதோடு, வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகள் குறித்தும் தெரிவித்தார்.

 

அத்துடன் குறித்த வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளிகளுக்கான குருதி சுத்திகரிப்பு இயந்திரத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை தவிசாளரும் அவருடைய நண்பர்களும் மேற்கொண்டு வருகின்றனர் எனும் மகிழ்ச்சியான செய்தியையும் அமைச்சரிடம் தெரிவித்தார்.

 

அத்துடன் அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கால கட்டத்தில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் தேவைப்பாடுகள் குறித்தும், மகப்பேற்று வைத்தியருக்கான தேவை, சிறுநீரக நோயாளிகளுக்கான குருதி மாற்று இயந்திரத் தேவை, சத்திர சிகிச்சை நிபுணர்களின் தேவைப்பாடு போன்ற விடயங்கள் குறித்து பல தடவைகள் பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தமை குறித்து அமைச்சருக்கு நினைவூட்டலும் செய்திருந்தார்.

 

மேலும், எதிர்காலத்தில் இவ்வைத்தியசாலையில் ஆளணிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இக்கட்டடம் போதுமானதாக இருக்காது எனும் குறைபாட்டைக் கருத்திற்கொண்டு கட்டடத்தை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், இதற்காக புகையிரத திணைக்களத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியைப் பெற்றுத் தருமாறும், பணிவுடன் கேட்டுக்கொள்ளும் அதே வேளை குறித்த காணியை வைத்தியசாலை தேவைக்கு பயன்படுத்தும் வகையில் என்னால் பிரதேச அபிவிருத்தி குழு மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது – அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்ளுமாறும் சுகாதார அமைச்சரை தவிசாளர் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *