கறுப்பு ஜூலை கலவர சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – சுந்தரமூர்த்தி கபிலன்

கறுப்பு ஜூலை நினைவேந்தலுக்கு எதிரான செயற்பாடாக சகோதரத்துவ தின புகையிரத பயணம் இருக்காதென தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுந்தரமூர்த்தி கபிலன், மாறாக குறித்த கலவரத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதற்கான அழுத்தத்தை அது அரசாங்கத்திற்கு ஏற்படுத்தும் என்றார்.

சகோதரத்துவ தினம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு நேற்று(22) யாழில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் காரியாலயத்தில் நடைபெற்றபோதே சுந்தரமூர்த்தி கபிலன் இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த ஆண்டில் இருந்தே ஆட்சி வகிக்கிறது. சர்வதேச விசாரணையை நீர்த்துப் போகச் செய்ய வைக்க வேண்டுமாக இருந்தால் இந்த ஆண்டே குறித்த சகோதரத்துவ செயற்பாட்டை முன்னெடுத்து இருக்க வேண்டும். ஆனால் தேசிய மக்கள் சக்தியின் பிரதான அங்கமாக உள்ள சோசலிச இளைஞர் சங்கம் கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து குறித்த செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதற்கு முன்னரும் யாழ்ப்பாணத்திற்கு ஒரு தடவை சகோதரத்துவ தின செயற்பாடு இதே நாளில் முன்னெடுக்கப்பட்டது.

சோசலிச இளைஞர் சங்கம் ஆட்சியில் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன இன மத சாதி பேதங்கள் இல்லாத ஒரு நாட்டை உருவாக்குவதற்காக குறித்த செயற்பாட்டை முன்னெடுத்து வருகிறது. இதனை நாங்கள் தொடர்ச்சியாகவும் செய்வோம். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

இது கறுப்பு ஜூலை நினைவேந்தலுக்கு எதிரான செயற்பாடாக இருக்கப் போவது அல்ல. அது இன்னொரு விதத்தில் அவ்வாறான வன்முறைகள் இனி இடம்பெறக் கூடாது என்ற வகையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். எந்த ஒரு வகையிலும் உணர்வுகளை சிதைப்பதாக இருக்காது.

சோசலிச இளைஞர் சங்கம் என்பது தேசிய மக்கள் சக்தியில் ஒரு பெரிய பலத்தைக் கொண்ட அமைப்பாகும். அந்த அமைப்பு இந்த செயற்பாட்டை செய்யும் போது 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவர சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதற்கான அழுத்தம் அரசாங்கத்திற்கு ஏற்படும்.

குறித்த சம்பவம் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட விடயங்களுக்கு தண்டனை வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நாம் நம்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *