அம்பாறை, மொனராகலை மாவட்ட மக்கள் கொழும்புக்கு வருவதற்கு மத்தளை அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பிரயாணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு வருமானமும் கிடைத்து வருகின்றன. எனவே அம்பாறை, மொனராகலை, மட்டக்களப்பு மக்களும் நன்மை பெறக்கூடிய வகையில் மத்தளை அதிவேக நெடுஞ்சாலையை பொத்துவில் ஊடாக கல்முனை வரை நீடிப்பதற்கான அபிவிருத்தித் திட்டத்தை நெடுஞ்சாலைகள் அமைச்சு அடுத்த வருடத்திட்டத்திலாவது சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் குருநாகல், தம்புள்ள அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தித் திட்டம் நிறைவு பெறும் வரை கிழக்கு மாகாண மக்கள் நன்மை பெற முடியும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் திரு. பிமல் ரத்னநாயக்க தலைமையில் 22 ஆம் திகதி பாராளுமன்றில் நடைபெற்ற அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள சம்மாந்துறை பிரதேசத்தில் இயங்கி வந்த இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போவை 2021 ம் ஆண்டு கடந்த அரசாங்க காலத்தில் தற்காலிகமாக கல்முனை டிப்போவோடு இணைக்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் அதிக சனத்தொகை வாழும் பிரதேசமான சம்மாந்துறை பிரதேசத்தின் இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போவை மீண்டும் சம்மாந்துறை பிரதேசத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சம்மாந்துறை இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போவுக்கான காணி ஒதுக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்ட நிலையில் சம்மாந்துறை டிப்போ கல்முனை டிப்போவுடன் கடந்த அரசாங்கத்தால் தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவரும், போக்குவரத்து அமைச்சின் உயர் அதிகாரிகளும் சமுகமளித்திருக்கும் இம் முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில் சம்மாந்துறை பிரதேச மக்களின் நலன்கருதி தற்காலிகமாக கல்முனை டிப்போவோடு இணைக்கப்பட்ட சம்மாந்துறை டிப்போவை மீண்டும் இயங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள தீகவாபி, இறக்காமம்-முகையதீன் கிராமங்களுக்கான வீதிகள் தொடர்பாக அமைச்சர் பணிப்புரைகள் வழங்கியும் இதுவரையும் ஆரம்பிக்கப்படாமல் இருப்பதாக தீகவாபி கிராம மக்கள் தங்களின் நாளாந்த வேலைகளை முடிப்பதற்கு நீண்டநேரம் பிரயாணம் செய்து அட்டாளைச்சேனை பிரதேச செயலகம், பிரதேச சபை உட்பட பல காரியங்களுக்குச் சென்று தங்களின் வேலைகளை முடிக்க வேண்டியுள்ளது.
தீகவாபி – ஹிரா வீதி புனரமைக்கப்பட்டால் 5 கிலோ மீற்றரில் தீகவாபி பிரதேச மக்கள் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு பிரயானம் செய்யக்கூடியதாக அமையும். ஆனால் தீகவாபி – ஹிரா கிராம வீதி புனரமைக்கப்படாததால் தீகவாபியிலிருந்து 15 கிலோ மீற்றர் தூரம் சுற்றி பிரயாணம் செய்து அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு தீகவாபி மக்கள் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இவ்வீதிகள் தொடர்பாக அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டும் இதுவரையும் தீகவாபி – ஹிரா கிராமம், இறக்காமம் – முகையதீன் கிராம வீதிகள் ஆரம்பிக்கப்படாமல் உள்ளது. எனவே, இது தொடர்பாக விஷேட செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையின் கோரிக்கைக்கு பதிலளித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் திரு. பிமல் ரத்நாயக்கா மத்தளை அதிவேக நெடுஞ்சாலை வீதியிலிருந்து கல்முனை வரை விஸ்த்தரிக்கின்ற பணிகள் தொடர்பாக எதிர்காலத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபை திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் சம்மாந்துறை போக்குவரத்து சபையின் டிப்போவை மீண்டும் சம்மாந்துறையில் இயங்க வைப்பதற்கான அறிக்கையினை இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சமர்ப்பிக்குமாறும், தீகவாபி – ஹிரா கிராமம், இறக்காமம் – முகையதீன் கிராமங்களின் வீதி புனரமைப்பு தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் பிரதி அமைச்சரிடம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேட்டுக்கொண்டார்.

