சம்புக்களப்பு – தில்லையாறு பிரதான வாய்க்கால் புனரமைப்புப் பணிக்கு உலக வங்கித் திட்டத்தில் 30 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கழிந்தும் இதுவரை இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்படுவது குறித்து அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை – அக்கரைப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள சம்புக்களப்பு – தில்லையாறு வடிச்சல் புனரமைப்புப் பணிக்கு உலக வங்கி நிதி ஒதுக்கீட்டினால் 30 மில்லியன் பணம் ஒதுக்கப்பட்டு 2 வருடங்கள் கழிந்த நிலையில் இது வரையும் இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படாமல் இருப்பது தொடர்பாக அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் 2 கூட்டங்களில் தான் கோரிக்கை விடுத்தும் இன்னும் இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படாமல் உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
இதனால் அட்டாளைச்சேனை – அக்கரைப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான காணிகள் நீரில் மூழ்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இவ்வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி சபைகள், விவசாயக் குழுக்கள் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தும் இதுவரையும் நீர்ப்பாசனத் திணைக்களத்தால் இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படாமல் உள்ளது. எனவே, இது தொடர்பான விபரங்களை அம்பாறை மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவிக்க வேண்டும் என அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களான கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ ஆகியோரின் தலைமையில் நேற்று(31) நடைபெற்ற போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அம்பாறை மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் திரு. எச்.பி.பி. பண்டார,
இவ்வேலைத்திட்டத்தினை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

