சமூக ஊடகங்களுக்கு ஒழுக்க நெறிக்கோவை – காலத்தின் அவசியம்

ஆசிரியர் தலையங்கம் : 04

வணக்கம் என் உறவுகளே!

இன்றைய உலகில் சமூக ஊடகங்கள் தகவல் பரிமாற்றத்தின் வலுவான கருவியாக மாறியுள்ளன. உடனடி செய்திப் பரவல், சுதந்திரமான கருத்து வெளிப்பாடு, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பல நல்ல பங்களிப்புகளைக் கொண்டுள்ளன. எனினும், கட்டுப்பாடற்ற பயன்பாடு பல்வேறு ஆபத்துகளையும் உருவாக்கியுள்ளது. தவறான செய்திகள், வதந்திகள், வெறுப்புப்பேச்சுக்கள், இன, மத, அரசியல் பிரிவினையைத் தூண்டும் பதிவுகள் போன்றவை சமூக அமைதிக்கும் தேசிய பாதுகாப்பிற்கும் பெரும் சவாலாக மாறியுள்ளன.

சமீப காலங்களில் இலங்கையிலும் சமூக ஊடகங்கள் வழியாக பரப்பப்படும் பொய்யான தகவல்கள், சமூக ஆர்ப்பாட்டங்களைத் தூண்டிய சம்பவங்கள் பலமுறை பதிவாகியுள்ளன. அரசியல் இலாபத்திற்காக வதந்திகள் திட்டமிட்டு பரப்பப்படுதல், இளைஞர்களைத் தவறான வழிகளில் ஈர்க்கும் உள்ளடக்கங்கள், ஆபாசமான உள்ளடக்கங்கள் மற்றும் இணையத்தள மோசடிகள் எனப் பல்வேறு அபாயங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இதனால், சமூக ஊடகங்களுக்கான “ஒழுக்க நெறிக்கோவை” ஒன்றை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகியுள்ளது. இது கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கல்ல, மாறாக சமூக ஊடகங்களை பொறுப்புடன் பயன்படுத்தும் சூழலை உருவாக்குவதற்கே. ஊடகச் சுதந்திரமும், தனிநபர் சுதந்திரமும் மதிக்கப்பட வேண்டும். ஆனால் அதே நேரத்தில், சுதந்திரம் என்ற பெயரில் சமூக ஒற்றுமையை உடைக்கும் விதத்தில் பயன்படுத்தக்கூடாது.

இந்த ஒழுக்க நெறிக்கோவை வெளிப்படையானதும், நியாயமானதுமானதாக இருக்க வேண்டும். செய்தியாளர்கள், சட்ட வல்லுநர்கள், சமூக அறிவியலாளர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் குடிமக்கள் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்கேற்புடன் உருவாக்கப்படும் வழிகாட்டுதலே நம்பகத்தன்மையைப் பெறும். தவறான தகவல் பரவலைக் கட்டுப்படுத்தும் தண்டனைகள், தனியுரிமை பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, பொது நலன் காக்கும் விதிகள் போன்ற அம்சங்கள் அவசியம் இணைக்கப்பட வேண்டும்.

சமூக ஊடகங்கள் ஜனநாயக உரிமைகளை விரிவுபடுத்தும் கருவியாக இருக்க வேண்டுமே தவிர சமூக கலகங்களைத் தூண்டும் ஆயுதமாக அல்ல. ஆகவே, ஒழுக்க நெறிக்கோவை உருவாக்கப்படுவது தாமதிக்கக்கூடாது. சுதந்திரமும் பொறுப்பும் ஒன்றாகச் செல்லும் போது மட்டுமே, சமூக ஊடகங்கள் நாட்டு முன்னேற்றத்திற்கு உண்மையான பலமாக அமையும்.
என்றும் அன்புடன்,
ஆசிரியர்
அ. அருள் சஞ்ஜீத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *