சட்ட விரோதமான முறையில் மாடுகளை வாகனங்களில் அடைத்து கடத்தி கொண்டுவரப்பட்ட நிலையில் மிருகவதைச் சட்டத்தின் கீழ் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரத்னாயக்க தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 30 மாடுகள் மீட்கப்பட்டதுடன் வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் ஓட்டமாவடியிலிருந்து கல்முனைக்கு 23 மாடுகள் கடத்திவரப்பட்ட நிலையில் ஒரு மாடு இறந்துள்ளதுடன் 22 மாடுகள் மற்றும் இரு சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று மாலை ஓட்டமாவடியிலிருந்து கல்முனைக்கு கடத்தி வரப்பட்ட ஏழு மாடுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்ட நபரையும் மாடுகளையும் நாளை(03) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச் சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

