திருக்கோணமலை மாநகர சபையின் தொடர்ச்சியான பொறுப்பற்ற செயல்பாடுகள், திட்டமிடல் குறைபாடுகள் மற்றும் அடிப்படை சேவைகளுக்கான அலட்சியமான அணுகுமுறையைக் கண்டித்து, இன்று(24) காலை 9.15 மணியளவில் நகரில் பரவலான அமைதியான கவனயீர்ப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த கவனயீர்ப்பில் திருகோணமலை மாவட்டத்தினை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டக்காரர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளின்படி மாநகர சபையின் செயல்பாடுகளில் பல பகுதிகளில் கடும் குறைபாடுகள் காணப்படுகின்றன.
குறிப்பாக கடைகள், கட்டிடங்கள் வாடகைக்கு வழங்குவதில் பாராபட்சம் காட்டப்படுகின்றது. வியாபார நோக்கம் கொண்டவர்களுக்குக் குறைவான வாடகையும், சேவை நோக்கம் கொண்டு செயற்படும் ‘தளம்’ போன்ற அமைப்புக்களுக்கு அதிக வாடகையும் நிர்ணகிக்கப்பட்டிருத்தல்.
வீதிகளில் கட்டாக்காலி கால்நடைகளால் பாரிய விபத்துக்கள் நடைபெறுகின்றன. அதனை தடுப்பதற்கு மாநகரசபை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
சட்டத்துக்கு முரணான வகையில் கட்டிடங்கள் அமைக்கப்படும் போது இனத்தின் அடிப்படையில் கண்டுகொள்ளாமல் விடுதல் மற்றும் தாமதமாக முடிவெடுத்தல்.
பொதுமக்கள் இளைஞர்கள், பலமுறை தெரிவித்த கோரிக்கைகள் மற்றும் குறைகளுக்கு மாநகர சபையிடமிருந்து எந்தத் தகுந்த பதிலும் கிடைக்காமை போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என இளைஞர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டு கவனயீர்ப்பு பேரணியும் கவனயீர்ப்பு போராட்டமும் இடம் பெற்றது.
தளம் அலுவலக முன்றலில் ஆரம்பித்த பேரணி, மாநகரசபையில் நிறைவு பெற்றது.
பேரணியில் முன்னின்ற இளைஞர்கள் மேயரை சந்திக்க முனைந்தபோதும், மேயர் சுகவீனம் காரணமாக மாநகரசபைக்கு வருகை தரவில்லை என தெரிவிக்கப்பட்டது.
பின்னர் இளைஞர்கள் மூவரை அழைத்த மாநகர ஆணையாளர் இளைஞர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் இளைஞர்களால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. ஆயினும் ஊடகவியலாளர்கள் அக்கலந்துரையாடலை பதிவு செய்வதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், கலந்துரையாடலுக்கு பின்னரும் இச்சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்க, மாநகரசபை ஆணையாளர் மறுத்துவிட்டார்.
இவ்விடயம் தொடர்பாக இளைஞர்கள் குறிப்பிடுகையில், அமைதியான முறையில் நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு மூலம் மாநகர சபை தனது பொறுப்புகளை உணர்ந்து உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தெளிவான திட்டமிடல், சீரான சேவை வழங்கல், வெளிப்படைத்தன்மை, மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றை மாநகர சபை கடைப்பிடிக்க வேண்டியதையும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் கவனயீர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்ததாவது, ‘இது எந்த அரசியல் கட்சியினதும் நிகழ்ச்சி அல்ல. இது பொதுமக்களின் பிரச்சினைகளை முன்வைக்கும் குடிமைப் பொறுப்பின் ஒரு பகுதியாகும். நகரின் அடிப்படை சேவைகளை மேம்படுத்துவது அனைவருக்கும் பொதுவான கோரிக்கை.’
இந்த முன்னெடுப்பை குறித்து மாநகர சபை இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வழங்கவில்லை. ஆயினும் மாநகரசபை உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் ‘ இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் 26ம் திகதி நடைபெறும் விசேட கூட்டத்தில் கலந்துரையாடி பதில் வழங்கப்படும் என தெரிவித்தார்.
பொதுமக்கள், இந்த கவனயீர்ப்புக்குப் பின் மாநகர சபை மக்கள் குரலை கவனித்து செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

