ஏறாவூரில் பாதிக்கப்பட்ட பொதுமக்களைப் பாதுகாக்க நடவடிக்கை

மட்டக்களப்பு ஏறாவூர்ப் பிரதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்திலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான உதவி ஒத்தாசைகள், சமைத்த உணவுப்பொதிகள் மற்றும் நிவாரணம்  பொருட்கள் போன்றன கட்டமைக்கப்பட்டுள்ள குழுக்களின் ஊடாகவே பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்எச். முஸம்மில் தலைமையில்                         நகர சபை மண்டபத்தில்  நடைபெற்ற உயர்மட்ட மாநாட்டில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நகர சபையின் தவிசாளர் எம்எஸ். நழீம் , சபையின் அனைத்து கட்சிகளின் உறுப்பினர்கள் , அரச  திணைக்களங்கள்,  தொண்டர் அமைப்புக்கள் , அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள் , உள்ளுர் அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களை உள்ளடக்கிய பிரதிநிதிகள்                              இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

குறிப்பாக , நலன்விரும்பிகளின் பொதுவான நிவாரண உதவிகள்   கட்டமைக்கப்பட்டுள்ள குழுவின் சம்பந்தத்துடன் பகிர்ந்தளிக்கப்படும்போது உண்மையாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்களைச் சென்றடையுமென்று தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்களின் பாதுகாப்பு , இடம்பெயர்ந்தோரின் முகாம் பராமரிப்பு போன்ற நடவடிக்கைகளுக்காக தனியான குழுக்கள் செயற்படவுள்ளன.  உள்ளுராட்சி மன்றம் மற்றும் பிரதேச செயலக ஊழியர்களின் செயற்பாடுகளுக்கு தேசிய மக்கள் சக்தியின் இளைஞர் குழு                  உதவ முன்வந்துள்ளது.

இதேவேளை ,  இடம்பெயரும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் மூலமாக கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொடுக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பிரதேச செயலாளர் முஸம்மில் உறுதியளித்தார். வெள்ள அனர்த்தத்தினால் தொழில் வாய்ப்புக்களை இழக்கும் நபர்களுக்கு தேவையான உதவிகளை நலன்விரும்பிகள் மூலமாக பெற்றுக்கொடுக்க முயற்சி செய்வதாக ஜம்இய்யது உலமா சபை தெரிவித்துள்ளது.

வெள்ளநீர் வடிந்தோடுவதற்கான நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொண்ட நகர சபையின் தவிசாளர் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு          இங்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இந்த  பணிகளில் அரசியல் பேதமின்றி  அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *