அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய இடங்களில் வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பாக ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்துள்ளார். அதனை தாம் வரவேற்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
நேற்று(06) மாலை கிண்ணையடியில் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை வழங்கி வைத்த பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பாதுகாப்பான இடங்களில் மக்கள் குடியிருப்புகளில் வாழ்வதைத் தொடர்ந்து நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதற்கான மாற்று வழிகளை நாங்கள் செய்வோம் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் அது வரவேற்க வேண்டியதாகும்.
எனது பிரதேசத்திலும் ஆற்றங்கரையை அண்மித்த பகுதிகளிலும் மக்கள் வாழ்வதுடன் வருடா வருடம் இவ்வாறு பாதிப்பிற்குள்ளாகி வாழ்கின்றனர். அவர்களுக்கும் இவ்வாறான புதிய வீடுகளையும், இடங்களையும் வழங்கி பாதுகாக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் உள்ளதால் புதிய வீடுகளைக் கட்டுவதற்கோ அபிவிருத்திப் பணிகள் எங்களுக்கு அதிகாரம் இல்லை. அது எங்களால் முடியாத காரியம். அரசாங்க அமைச்சர்கள் அபிவிருத்க்தி குழுத் தலைவர்களே அவற்றினை மேற்கொள்ள முடியும்.
எங்களுடைய பணிகள் அரசு மக்களுக்கு வழங்குகின்ற வாக்குறுதிகளை மக்களுடைய சார்பில் நிறைவேற்றுவதற்கு எடுத்துக் கூறுவது தான். இதிலே ஜனாதிபதியை சாணக்கியன் விமர்சிக்கிறார் என்று சிலர் கருதலாம். மக்களுக்குக் கிடைக்கக்கூடியவற்றைப் பெற்றுக் கொடுப்பதுதான் எங்களுடைய பொறுப்பு.
ஜனாதிபதி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் குறிப்பிட்டவாறு ஆறு மாதத்திற்குள் அவற்றினை நிறைவேற்றாவிட்டால் அதனை கேள்விக்குள்ளாக்குவது தான் எங்களது பொறுப்பாகும். அதற்குத்தான் நாங்கள் இருக்கின்றோம். மக்களுக்குக் கிடைக்க வேண்டியதை அரசாங்கத்துடன் கதைத்து பெற்றுக் கொடுக்க வேண்டியது எங்களுடைய செயல்பாடும் கடமையுமாகும்.
அந்த வகையில் மலையகத்தில் வாழும் மக்கள் சார்பாக ஜனாதிபதி கருத்தை வெளியிட்டு இருக்கிறார். மலையகத்தில் வாழும் மக்கள் கூடுதலாக மண்சரிவு ஏற்படும் இடங்களில் தான் வாழ்ந்திருக்கிறார்கள். நாங்களும் சென்று பார்வையிட்டு இருந்தோம். அவர்களுக்கு அந்த இடத்திலே விடுகளை காட்டிக் கொடுப்பது மீண்டும் ஒரு அபாய நிலைக்கு இட்டு செல்வதாக அமையும். எனவே எத்தனையோ தசாப்தங்களாக கேட்டுக் கொண்டிருக்கின்ற தங்களுக்கு கிடைக்கக்கூடிய நில உரிமையை வழங்கி அவர்களுக்கென்று காணிகளை வழங்கி மண்சரிவில் பாதிக்காத வகையில் வீடுகளை அமைத்துக் கொடுத்தால் அவர்களுக்குரிய நீண்ட காலப் பிரச்சனைக்கான தீர்வாக அமையும்.
இந்த விடயங்களை ஜனாதிபதி அறிக்கையின் படி செயற்படும்போது அவருடன் சேர்ந்து நாங்களும் பயணிக்கக் கூடியதாக அமையும். நாங்கள் பிழைகளை சுட்டிக்காட்டுகின்ற பொழுது அரசுக்கு எதிரானவர்கள் அல்ல இந்த கிண்ணையடி பிரதேசத்திற்கு வந்து பார்த்தபோது இந்த மக்களுக்கு அனர்த்த நேரங்களில் பாதுகாப்பாக இருப்பதற்கு முகாம் வசதிகளுக்குரிய கட்டிட வசதிகள் இல்லை. எனவே இங்குள்ளவர்களை விளையாட்டுக் கழகங்கள் சமூக அமைப்புக்கள் தற்காலிகமாக வசதியை அமைத்துக் கொடுத்து உதவி செய்துள்ளனர்.
இங்கிருந்த 206 குடும்பங்களை அரசாங்கம் தன்னுடைய நிவாரணப் பதிவில் சேர்த்துக் கொள்ளவில்லை. வீடு துப்புரவு செய்வதற்கான நிதி வழங்குவது தொடர்பான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . வீடுகளும் சேதமடைந்துள்ளன இவ்வாறானதொரு விடயங்களை நாங்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஜனாதிபதி இரவு இரவாக வேலை செய்கிறார். பாவமாகவுள்ளது என்று அவரிடம் விடயங்களை தெரிவிக்காமல் இருக்க முடியாது. இந்த பிரதேச மக்களின் வாக்குகளால் நான் பாராளுமன்றம் சென்றேன். எனவே இந்தப் பிரதேச மக்களுடைய குறைபாடுகளை எடுத்துக் கூற வேண்டிய பொறுப்பும் கடமையும் எனக்கு உள்ளது.
எனவே எனக்கு விமர்சனம் என்பது புதிய விடயம் அல்ல. விமர்சனம் செய்வதால் இவ்வாறு மக்களுக்கு கிடைக்கக்கூடிய உதவிகளை இல்லாமல் செய்வதற்கு தயவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தமது உரையில் மேலும் தெரிவித்தார்.



