நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரைப் பகுதியில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகின்றமையால் கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த நிரந்தர கட்டுமானங்கள் அனைத்தும் அழிவடைந்துள்ளன.
கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த சிறுவர் பூங்கா, கொங்றீட் வீதி, சீமெந்து இருக்கைகள் மற்றும் நடைபாதைகள் உள்ளிட்டவை கடல் அலையினால் அள்ளுண்டு சென்று முற்றாகச் சேதமடைந்துள்ளன.
கடலரிப்புத் தொடரும் பட்சத்தில், கடல் நீர் ஊர்மனைக்குள் உட்புகும் பேராபத்து நிலவுவதாகவும், இதனால் அருகிலுள்ள முழுக் கிராமமே பாதிக்கப்படலாம் எனவும் பிரதேசவாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்த பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல், நிலைமைகளைப் பார்வையிட்டதுடன் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கும் திணைக்களங்களுக்கும் இது குறித்து அறிவித்துள்ளார்.
அபாய நிலையில் உள்ள வீதிக்குள் எவரும் நுழையாதவாறு நகரசபை ஊழியர்கள் மூலம் கற்கள் இடப்பட்டு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சிறுவர் பூங்காவிற்குள் கடல் நீர் உட்புகுந்துள்ளதால், மின்சாரத் தாக்கங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க மின்சார சபையினூடாக மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் அவ்வப்போது மழையுடனான காலநிலை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடற்கொந்தளிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், கரையோர மக்கள் மேலதிக அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

