தமிழ் தேசத்தின் வரலாற்றை புதிய கல்வி சீர்திருத்தத்தில் மீண்டும் இணைக்குமாறு கோரிக்கை

வடக்கில் செயற்படும் முக்கிய தமிழ் அரசியல் கட்சி, முன்னைய அரசாங்கங்களால் பாடசாலை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கப்பட்ட தமிழ் தேசத்தின் வரலாற்றை, புதிய கல்வி சீர்திருத்த செயல்முறையின்போது மீண்டும் இணைக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தனது கட்சியின் எட்டு உறுப்பினர்களும் அண்மையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக, கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

 

தமிழ் மற்றும் சைவ மரபுகளை வளர்க்க தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஆறுமுக நாவலர் பற்றிய உண்மைகள் கூட தமிழ் பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரான பிரதமரிடம் தெரிவித்ததாக எம்.பி சிறீதரன் தெரிவித்தார்.

 

“குறிப்பாக ஆறுமுக நாவலரின் வரலாறு கூட இப்போது பாடப்புத்தங்களில் இல்லை. ஆகவே தமிழர்களுடைய வரலாறு, தமழர்களின் அடிப்படை கோட்பாடுகள், ஒரு காலத்தில் இருந்தது. 70, 80 களில் பாடப்புத்தகங்களில் இருந்தன. கடந்த அரசுகள் திட்டமிட்டு தமிழர் வரலாற்றை மெல்ல மெல்ல இல்லாமல் செய்தன. அந்த இல்லாமல் செய்யப்பட்டதை மீண்டும் பாடப்புத்தகங்களில் கொண்டுவரப்பட வேண்டுமென நாங்கள் தெளிவாக அவருக்கு விளங்கப்படுத்தியிருந்தோம்.”

 

நாட்டை ஆண்ட தமிழ் மன்னர்களின் வரலாறு, அவர்கள் கட்டிய குளங்கள் மற்றும் மதத்தளங்கள் பற்றிய தகவல்கள் பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஆசிரியரான சிறீதரன் எம்.பி மேலும் தெரிவித்தார்.

 

“தமிழ் மக்கள், ஈழத் தமிழர்கள் இந்த மண்ணில் நிரந்தர குடிமக்கள். பூர்வீக குடிமக்கள். இந்த மண்ணுக்கு சொந்தமானவர்கள். எங்களுக்கு என்று ஒரு வரலாறு உண்டு. குறிப்பாக குளக்கோட்டன், சங்கிலியன், பண்டாரவன்னியன், அரச கேசரி போன்றோர் இந்த மண்ணை ஆண்டுள்ளனர். எல்லாளன் இந்த மண்ணை 40 ஆண்டுகள் ஆண்டுள்ளான். இங்கு தமிழ் மன்னர்கள் போராடியுள்ளனர். அவர்களால் பல குளங்கள், கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. ஆங்கிலேயர், ஒல்லாந்தர், போர்த்துக்கேயர் ஆகியோருக்கு எதிராக போராடியுள்ளனர். ஆகவே இந்த வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளன.”

 

தமிழ் மக்களின் வரலாறு தொடர்பான மிக முக்கியமான தகவல்கள் பாடசாலை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கப்பட்டமை மற்றும் சேர்க்க வேண்டிய விடயங்கள் குறித்து கல்வி அமைச்சரான, பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் விரிவான அறிக்கையை சமர்ப்பிப்பதாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *