அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள செம்மணி மனித புதைகுழி அகழ்வு பகுதிக்குள் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி அகழ்வு பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் நேற்று காலை எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன் பிரகாரம் குறித்த அகழ்வு பகுதியை பார்வையிட தீர்மானித்து, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார், சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், சட்டத்தரணிகளான வி.எஸ்.நிரைஞ்சன், ரனித்தா ஞானராஜா, குற்ற புலனாய்வு திணைக்களத்தினர், பொலிஸார், மயான குழுவினர், வழக்காளி அடங்கிய குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
குறித்த அகழ்வு இடத்தில் வெள்ள நீர் புகுந்து நிரம்பிக் காணப்பட்டதால் அகழ்வு பணிகளை உடனடியாக தொடங்க முடியாது என்றும் இந்த வெள்ள நீர் வற்றும்வரை பார்த்து அகழ்வு பணியை ஆரம்பிக்க வேண்டும் அல்லது அந்த வெள்ள நீரை அகற்ற வேண்டும் என்ற அடிப்படையில் எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் திகதி நல்லூர் பிரதேச சபை உதவியுடன் சட்ட வைத்திய வைத்திய அதிகாரி ஊடாக நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் வெள்ள நீரை அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெள்ளநீரை அகற்றிய பின்னர் அகழ்வு பணி எப்போது நடைபெறும் என்பது தொடர்பான திகதி நிர்ணயிக்கப்படும். இந்த வழக்கு பெப்ரவரி 9-ம் திகதி மீண்டும் அழைக்கப்படவுள்ளது என பாதிக்கப்பட்ட தரப்புகளின் சட்டத்தரணிகளான வி.எஸ்.நிரைஞ்சன் மற்றும் ரனித்தா ஞானராஜா ஆகியோர் தெரிவித்தனர்.
மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை ஆரம்பிப்பதற்காக கடந்த வருட இறுதியில் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் மழை வெள்ளம் காரணமாக குறித்த நிதி திரும்பிய நிலையில், சட்ட வைத்திய அதிகாரி சமர்ப்பிக்கும் புதிய பாதீட்டுக்கமைய அகழ்வு பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

