தேர்தல் காலத்தில் தான் ஒரு இனவாதி அல்லவென உறுதி அளித்திருந்த ஜனாதிபதி தற்போது பௌத்த மதத்துக்குச் சார்பாக நடந்துகொள்வதோடு ஏனைய மதத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஒரு நிலையை வெளிப்படுத்துவதாக தமிழ் அரசியல் தலைவரொருவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஜனாதிபதி இனவாதக் கருத்துகளை வெளியிடுகின்றார் என்ற கருத்து முன்வைக்கப்பட்டபோது, அவருக்கு அவ்வாறான சிந்தனை இருக்க வாய்ப்பில்லை என நானே கூறியிருந்தேன். ஆனால் ஜனாதிபதியான பின்னர் அவருக்கும் பல்வேறு அழுத்தங்கள் இருப்பதை இப்போது காணக்கூடியதாக உள்ளது.”
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சர்ச்சைக்குரிய திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் நிறைவேற்று அதிகாரம் செயற்பட்ட விதம் இதனைப் புலப்படுத்துவதாகத் தெரிவித்தார்.
“குறிப்பாக திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் அந்தச் சிலையை அங்கே வைக்கக்கூடாது எனக் கூறி பொலிஸாரே முதலில் அதனை அகற்றிவிட்டு பின்னர் பாதுகாப்புக்காக அகற்றப்பட்டதாகக் கூறி அதே பொலிஸார் மீண்டும் அச்சிலையை அங்கே வைப்பதற்கு நடவடிக்கை எடுத்தமை இந்த அரசாங்கத்தின் ஒரு செயற்பாடாகும். தற்போது நீதிமன்றம் வேறொரு நடவடிக்கையை எடுத்துள்ளது, அது வேறு விடயம். ஆனால் இது நிறைவேற்று அதிகாரம் இவ்வாறு பௌத்த மதத்துக்கு நெகிழ்ந்து கொடுத்து ஏனைய மதத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் செயற்பட்ட ஒரு சந்தர்ப்பமாகும்.”
திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்கள் மற்றும் புதிய புத்தர் சிலையை நிறுவுவதற்கு எதிராகக் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் கடற்கரை வளங்கள் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதிகளான பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 சந்தேகநபர்களை ஜனவரி 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப்பொருள் ஒழிப்புக்கான “முழு நாடும் ஒன்றாக – தேசிய செயற்றிட்டம்” வட மாகாண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, குறித்த இடத்தின் பெயரைக் குறிப்பிடாது, வடக்கில் ஒரு வழிபாட்டுத்தலத்தைச் சுற்றி இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு மக்கள் ஒன்றுகூடுவதாகத் தெரிவித்திருந்தார்.
இராணுவத்தின் அனுசரணையுடன் காங்கேசன்துறை தையிட்டியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த தேசிய மக்கள் முன்னணியின் பங்களிப்புடன் காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் முன்னெடுத்து வரும் போராட்டத்துக்கு இரண்டு வருடங்கள் கடந்தபின்பும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.
“ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் வந்து அந்த விகாரையைச் சுற்றி ஒன்றுகூடுகிறார்கள். காணிக்காக அல்ல, இனவாதத்திற்காகவே. அவ்வாறு பௌர்ணமி தினங்களில் அங்கே வந்து கூச்சலிடுபவர்களில் யாருக்காவது அங்கு காணி இருக்கின்றதா என ஆராயுமாறு நான் புலனாய்வுப் பிரிவினருக்குக் கூறினேன். எனவே, அதிகாரத்தை இழந்த இனவாதக் குழுக்கள் ஆங்காங்கே மீண்டும் இனவாதத்தைத் தூண்ட முயற்சி செய்கின்றன.”
போராட்டக்காரர்களை இனவாதிகள் எனக் கண்டிக்கும் அந்தப் பிரகடனம் தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது பலவந்தமாக அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் மட்டும்தான் போராட வேண்டும் என்பதில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியிருந்தார்.

