வடமராட்சி கிழக்கு போக்குவரத்து பிரச்சனைகள் தொடர்பாக அதிகாரிகள் கள விஜயம்

யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் அண்மைக்காலமாக பல போக்குவரத்துப் பிரச்சனைகள் இடம்பெற்றதுடன் இப் பிரச்சனைகள் தொடர்பாக பல்வேறுபட்ட முறைப்பாடுகள் வடமராட்சி கிழக்கு பொது அமைப்புக்களால் உரிய திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஆனாலும் இப் பிரச்சனைகள் தொடர்பாக எந்த வித தீர்வும் கிடைக்காத நிலையில் இந்த மாதம் ஆரம்பத்தில் இடம்பெற்ற வடமராட்சி கிழக்கு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இப் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் வடமராட்சி கிழக்கு பகுதிக்கு உரிய நேரத்திற்கு வருகை தருவது இல்லை மற்றும் மருதங்கேணி வைத்தியசாலை அருகாமையில் அதிக நேரம் காத்திருந்து பயணிகளை ஏற்றிச் செல்லல் மற்றும் கேவில் வரை பேரூந்துகள் செல்வதில்லை, இலகுவாக பழுதடையும் பேரூந்துகளை வடமராட்சி கிழக்கில் பணிக்கு அமர்த்துதல் என பல்வேறுபட்ட முறைப்பாடுகள் ஊடகங்களில் வருவதைத் தொடர்ந்து இச் சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வடமராட்சி கிழக்கு அபிவிருத்திக் குழுத் தலைவருமான ரஜீபனிடம் உடனடிக் கோரிக்கையை மக்கள் வைத்த போது அவரின் உடனடி உத்தரவுக்கு இணங்க இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள் இன்று கள விஜயம் செய்தனர்.
இக் கள விஜயத்தில் ஆய்வு செய்யப்பட்ட விடயங்கள்.
வடமராட்சி கிழக்கு பகுதிக்கு பேரூந்துகள் பற்றாக்குறையாகக் காணப்படுவதால் மருதங்கேணி வைத்தியசாலை பகுதியில் மக்கள் கோரிக்கைக்கு இணங்கவே இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் அதிக நேரம் நிற்பதாகவும் அச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் வரும் கருத்துக்கள் போலியானது எனவும் அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டதுடன் பேரூந்துகள் போதியளவு பணிக்கு அமர்த்தும் வரை அவ் இடத்தில் காத்திருந்து மக்களை ஏற்றி செல்வது அவசியமாக காணப்படுவதால் அவ்வாறே செல்லும் என கூறியுள்ளார்.
கேவில் வரை பேரூந்து செல்வது தொடர்பாக ஆய்வின் முடிவில் பேரூந்து சாரதி மற்றும் நடத்துனர் இரவு நேரங்களில் தங்கிசெல்வது தொடர்பாக பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் மற்றும் பேரூந்து நிறுத்தி வைப்பதில் பிரச்சினை காணப்படுவதால் கடந்த காலத்தில் சில அசௌகரிய சம்பவம் நடந்ததாகவும் அதற்கு இனிமேல் அவ்வாறு நடைபெறாது மற்றும் தங்குமிட வசதிகள் தொடர்பாக கேவில் கிராம அபிவிருத்தி சங்கம் வசதிகளை ஏற்பாடு செய்து தந்துள்ளது என கூறியுள்ளனர்.
மற்றும் இனிமேல் வடமராட்சி கிழக்கு மக்கள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளால் சிரமப்படத் தேவை இல்லை என்றும் அவ்வாறு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக அறியத் தந்தால் நாம் அதற்கான தீர்வுகளை பெற்றுத் தருவதாக கூறினார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *