யூரி தோட்டத் தொழிலாளர்கள் இன்று(23) பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கடந்த காலங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக யூரி தோட்டப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். இதன்விளைவாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மக்கள் வசிக்கும் பகுதிகள் பெரிதும் சேதமடைந்ததுடன், தோட்டத்தில் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலை, ஆலயம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளன. இருப்பினும், இதுவரை உரிய புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர்.
தற்போது யூரி தோட்டப் பாடசாலை பாதுகாப்பற்ற நிலையில் செயல்பட்டு வருவதாகவும், மாணவர்களின் பாதுகாப்பு கடுமையாக கேள்விக்குறியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனவே, பாதுகாப்பான தோட்டக் காணிகளை அரசாங்கத்தின் மூலம் சட்டபூர்வமாகப் பெற்றுக் கொண்டு, பாடசாலையை புதிய இடத்தில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

