கடற்றொழில் அமைச்சரால் மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பில் கடற்றொழில் அமைச்சர் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களை வழங்கி வைத்தார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் அழைப்பின் பெயரில் மாவட்டத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு 26.9 மில்லியன் பெறுமதியான மீன்பிடி உபகரணங்களை இன்று(11) பழைய மாவட்ட செயலத்தில் வழங்கி வைத்தார்.

கடந்த “டித்வா” புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு பெறுமதியான படகுகள், காசொலைகள், புதிய வள்ளங்கள், திருத்தப்பட்ட வள்ளங்கள் மற்றும் பல மீன்பிடி உபகரணங்கள் இதன் போது வழங்கப்பட்டன.

மேலும் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய மீன் பிடி வசதிகளை மேம்படுத்தல், உயர் தரத்திலான வலைகளை அறிமுகம் செய்தல், கடலுக்கு செல்லும் மீனவர்கள் சுகவீனம் ஏற்படும் போது அவர்களை மீற்பதற்கான விசைப்படகின் தேவை கடற்றொழிலாளர்களினால் இங்கு வலியுறுத்தப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் சட்ட விரோத மீன்பிடியை தடுத்து கடலையும் கடல் வளத்தையும் பாதுகாப்பிற்கு தேவையான சட்ட நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜ், சினோர் நிறுவன பணிப்பாளர் அஜித்த எதிரிசிங்க, கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் அப்துல்லாஹ்,
கால் நடை மற்றும் காணி விவசாய அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திலகநாதன் மாவட்ட நீர் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் உத்தியோகத்தர் ஜெகப் நெல்சன், மீனவ சங்க தலைவர்கள் , கடற்றொழிலாளர்கள் உயரதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *