திறன் அபிவிருத்தி பாடநெறியின் வருடாந்த பாராட்டு, விருது வழங்கும் விழா

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையம் ஏற்பாடு செய்து நடாத்திய வருடாந்த பாராட்டு மற்றும் கௌரவிப்பு நிகழ்வு (24) ஆம் திகதி சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

 

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி. நௌஷாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை அரசியல் பேரவை உறுப்பினரும், கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்திக்குழுவின் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

 

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டதோடு, காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான், கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மாவட்ட உத்தியோகத்தர் ரீ.எம். றின்சான், அக்கரைப்பற்று கலாசார மத்திய நிலையப் பொறுப்பதிகாரி ஐ.எல். ரிஸ்வான் ஆகியோர் நிகழ்வில் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

 

கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம். பழீல், மருதமுனை கலாசார மத்திய நிலையப் பொறுப்பதிகாரி ஜெனிற்றா , சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ரஸ்மி மூஸா ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

 

கலாசார மத்திய நிலைய நிறைவேற்றுக்குழுவின் உறுப்பினர்களான ஓய்வுபெற்ற கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஷ்ரப், ஆசிரியர் எம்.ஐ.எம். அமீர், மூத்த கலைஞர்களான சிரேஷ்ட அண்ணாவியார் கலாபூஷணம் ஏ. இஸ்ஸதீன் மற்றும் அண்ணாவியார் எம். ஐ. அலாவுதீன், மத்திய நிலையத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளர் ஊடகவியலாளரும் பல்துறைக் கலைஞருமான எம்.எஸ்.எம்.ஸாகிர், மத்திய நிலைய அபிவிருத்தி சங்க செயலாளர் அஸ்வான் மௌலானா, பொருளாளர் ஹபீல் ஆசிரியர் உட்பட அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் மத்திய நிலைய மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

நிகழ்வில், கடந்த வருடம் கலாசார மத்திய நிலையத்தில் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட பாடநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் அம்மாணவர்களைப் பயிற்றுவித்து தேசிய மட்டத்தில் சாதனை நிலை நாட்ட காரணமாய் அமைந்த வளவாளர்களைப் பாராட்டி கௌரவித்த நிகழ்வுடன் ஏனைய பாராட்டு, கௌரவம், நினைவுச் சின்னம் வழங்கும் வைபவங்களும் இடம்பெற்றதோடு, தேசிய பிரதீபா போட்டிகள் மற்றும் மாகாண மட்டங்களில் சாதனை நிலை நாட்டிய பலரும் விருது வழங்கி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

 

நிகழ்வின் போது, கடந்த வருடம் (2025) திறன் அபிவிருத்தி பாடநெறியின் களிகம்பு பிரதீபா போட்டியில், பழமையான அணிகளை வீழ்த்தி, தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்ட சிரேஷ்ட அண்ணாவியார் கலாபூஷணம் ஏ. இஸ்ஸதீன் தலைமையிலான மத்திய நிலையத்தின் களிகம்பு (பொல்லடி) மாணவர்களின் களிகம்பு நிகழ்ச்சி, நிகழ்வில் மேடையேற்றப்பட்டதுடன், அந்நிகழ்வானது நிகழ்வுக்கு வருகை தந்திருந்த சபையோர் மனதைக் கவர்ந்தது அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் செய்து, அம் மாணவர்களைப் பாராட்டி கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

இதன்போது ரபான் மாணவர்களின் ரபான் நிகழ்வும் அண்ணாவியார் எம்.ஐ. அலாவுதீன் தலைமையிலான பொல்லடி மாணவர்களின் பொல்லடி நிகழ்வும் மேடையில் அரங்கேறின.

 

சுமார் 150க்கும் மேற்பட்ட திறன் அபிவிருத்தி பாடநெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்கள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

 

இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் மற்றும் கடந்த 03 ஆண்டுகள் சிறப்பாக கடமையாற்றி, மாறுதல் பெற்றுச் சென்ற எஸ். புவித்திரன் ஆகியோரும் நிகழ்வில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

 

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையப் பொறுப்பதிகாரியாகப் பாரமெடுத்த நாள் முதல் அயராது சிறந்த சேவையாற்றி வருவதற்காக மருதூர் கலை மன்றத்தின் ஆயுட்காலத் தலைவர் சிரேஷ்ட அண்ணாவியார் கலாபூஷணம் ஏ. இஸ்ஸதீன், அதன் பொதுச்செயலாளர் ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். ஸாகிர் (JP) உட்பட அமைப்பின் மாணவர் பொல்லடி (களிகம்பு) குழுவினரால் சாய்ந்தமருது கலாசார மண்டபத்தில் வைத்து, சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி. நௌஷாத், ‘சேவைச் செம்மல்’ விருது வழங்கி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டதோடு, கலாசார மத்திய நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களாலும் பாராட்டி, நினைவுச் சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.

 

மிகக் குறுகிய காலத்தில் சாய்ந்தமருதில் கலாசார மத்திய நிலையம் ஆரம்பிக்கப்பட்டாலும் அதில் ஆங்கிலம், சிங்களம் மற்றும் சித்திரம் நடனம் போன்ற பாரம்பரிய கலை, கலாசார பாட நெறிகளும் ஆரம்பிக்கப்பட்டு, அதில் பிரதேசத்தில் உள்ள மாணவர்கள் நன்மையடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. நிகழ்வை ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் தொகுத்து வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *