கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி பகுதியில் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படும் கனிம மணல் அகழ்வு மற்றும் காற்றாலை திட்டங்களுக்கு எதிராக இன்று(28) கிராம மக்கள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இலங்கையின் பல பகுதிகளில் காற்றாலை மற்றும் கனிம மணல் அகழ்வு திட்டங்களினால் மக்களின் வாழ்வாதாரம், மண்வளம் மற்றும் நிலங்கள் அபகரிக்கப்படுவதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.
கடந்த கால அரசாங்கங்கள் முன்னெடுத்த திட்டங்களையே தற்போதைய அரசாங்கமும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாகவும், முன்பு இனங்காணப்பட்ட பகுதிகளிலேயே மீண்டும் கனிம மணல் அகழ்வு மற்றும் காற்றாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த திட்டங்களினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்றும், அபிவிருத்தி திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தையும் குடியேற்றங்களையும் பாதிக்காத வகையில் அமைய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
குறிப்பாக கிராஞ்சி பகுதியில் சுமார் 8000 தென்னம்பிள்ளைகள் அழிக்கப்பட்டு அபிவிருத்தி முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதுடன், அத்தகைய அபிவிருத்தி தங்களுக்கு தேவையில்லை என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
கிராஞ்சி பகுதி மக்கள் தென்னைச் செய்கையை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருவதாகவும், சுமார் 2000 குடும்பங்கள் இதனை நம்பியே வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், அரசாங்கம் அவற்றை அழித்து அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மக்களின் வளங்களும் நிலங்களும் சுரண்டப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்த போராட்டக்காரர்கள், தங்களது கிராமத்தின் வளங்களையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக கூறினர்.
இந்த போராட்டத்தில் அரசியல் பிரதிநிதிகள், மத தலைவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பிரதேச மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

