சிறையில் அடைக்கப்பட்ட தமிழ் இசைக்கலைஞரின் விடுதலையை வலியுறுத்தி வடக்கில் திரண்ட தமிழர்கள்

புரட்சிகர வரிகள் கொண்ட பாடலைப் பாடி சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக குற்றம் சாட்டப்பட்டு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இளம் தமிழ் இசைக் கலைஞரை உடனடியாக விடுதலை செய்யக் கோரி கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் உள்ள பழைய மாவட்டச் செயலக கட்டடத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, தமிழ் இரசிகர்களிடையே ‘ஹிப்ஹொப் சங்கீத்’ எனப் பிரபலமாக அறியப்படும் 24 வயது கணேஷ் குமார் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியதோடு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

சமூக ஊடகங்களில் அவர் பதிவேற்றிய புரட்சிகரப் பாடலில் ‘தமிழீழம்’ என்ற சொல் இடம்பெற்றிருந்ததாகக் குற்றம் சாட்டி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி பொலிஸார் கணேஷ் குமார் சங்கீதனைக் கைது செய்திருந்தனர். இந்தச் சட்டம் எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்படுமென தற்போதைய அரசாங்கம் உறுதியளித்திருந்தது.

“பாடினால் பயங்கரவாதமா?”, “தாயகக் கலைஞனை உடனே விடுவி!”, “தமிழர் வலிகளைப் பாடுவதும் எழுதுவதும் குற்றமா?”, “ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் பிரிஏ-வை உடனே நீக்கு!”, “சட்டத்தின் பெயரால் நடக்கும் அரச பயங்கரவாதத்தை உடனே நிறுத்து.” போன்ற முழக்கங்களுடன் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில், ஏராளமான தமிழ் மக்கள் பிரதிநிதிகள், கலைஞர்கள், பொது அமைப்புப் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் கலந்து கொண்டனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி இளம் தமிழ் இசைக்கலைஞர் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக, கிளிநொச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

“சங்கீத்சன் தன்னுடைய பாடல் ஊடாக உண்மையான விடயங்களை, உணர்வுகளை மக்களுடன் பகிர்ந்துகொண்டார். அவரை கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருப்பது, மனிதாபிமானத்திற்கும், மனித உரிமைகளுக்கும் அப்பாற்பட்டது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.”

ஜனாதிபதியின் வார்த்தைகளால் மாத்திரம் தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைத்துவிடாது என சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், வாக்குறுதியளித்தபடி பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக இரத்து செய்யுமாறும், அச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுவிக்குமாறும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.

“இந்த மக்களின் உண்மைகளையும், அவர்களுடைய தேச விடுதலை சார்ந்த கனவுகளையும், இளைஞர்களின் எழுச்சியையும் மறைப்பதற்கு ஆயுதத்தையும், பயங்கரவாத தடைச் சட்டத்தையும்தான் பயன்படுத்துமாக இருந்தால் இந்த நாட்டின் நல்லிணக்கம் பற்றியெல்லாம் நீங்கள் பேசுகின்ற வார்த்தைகள் பொய் என்பதையே அது வெளிப்படுத்துகின்றது. நல்லிணக்கம் வேண்டும், சமாதானம் வேண்டுமென அனுர அரசு விரும்புகிறதென்றால், முதலில் நீங்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள். சமாதானத்தை ஏற்படுத்துங்கள். இந்த மக்களின் கைதுகளை நிறுத்துங்கள். கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுங்கள். சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள். வெறும் வார்த்தைகள் எங்கள் மக்களுக்கான விடுதலையல்ல. இந்த போராட்டத்தையும், இந்த மக்களின் எண்ணங்களையும் உள்வாங்கி ஜனாதிபதி அனுர, அந்த இளைஞரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.”

கணேஷ் குமார் சங்கீதன் சமூக ஊடகங்களில் பகிர்ந்த பாடல் ஒரு புரட்சிகரக் கவிதை என்பதாலும், அது தமிழீழ விடுதலைப் புலிகளைப் புகழவில்லை என்பதாலும், ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’ என்ற வார்த்தையைக் கூடக் குறிப்பிடவில்லை என்பதாலும், புலிகள் அமைப்பின் சின்னத்தைப் பயன்படுத்தவில்லை என்பதாலும், புலிகன் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பெயரையோ அல்லது தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பெயர்களையோ குறிப்பிடவில்லை என்பதாலும், அவரது கைதுக்கான அடிப்படை என்னவென இளம் தமிழ் இசைக் கலைஞருக்காக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி கேசவன் சயந்தன் கேள்வி எழுப்பியிருந்தார்.

கணேஷ் குமார் சங்கீதனின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தென்னிலங்கை அரசியல்வாதிகள், புலிகள் அமைப்பைப் போற்றும் பாடல்களை ஆளும் கட்சி தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தியதாகக் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *