கிண்ணியா பிரதேசத்தில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான விசேட இலவச மருத்துவ முகாமொன்று (7) ஆம் திகதி கிண்ணியா நூறானியா மண்டபத்தில் முறையில் நடைபெற்றது.
முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டில், திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் கிண்ணியா பிரதேச செயலகம் ஆகியன இணைந்து இந்த மருத்துவ முகாமை ஏற்பாடு செய்திருந்தன.
இவ் இலவச மருத்துவ முகாமினை திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
காலை 8:30 மணி முதல் மாலை 2:00 மணி வரை நடைபெற்ற இம் மருத்துவ முகாமில், கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட முதியோர்கள் கலந்துகொண்டு இலவச மருத்துவப் பரிசோதனைகளையும், ஆலோசனைகளையும் பெற்றுப் பயன்படைந்தனர்.
இவ் விசேட நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி, திட்டமிடல் பணிப்பாளர் ஐ. முஜீப், மாவட்ட முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ. எல். எம். இர்பான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், தேசிய மக்கள் சக்தியின் கிண்ணியா பிரதேச அபிவிருத்தி இணைப்பாளர் எம். ஈ. எம். ராபிக், வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் அஷ்ரப் இம்ரான், பிரதேச நிர்வாக உத்தியோகத்தர் கே. நிசவ்ஸ், பிரதேச முதியோர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. தணுஷியா, பிரதேச முகாமைத்துவ உதவியாளர் எம். எம். நிஜாமி, பிரதேச செயலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இம் மருத்துவ முகாம் இப்பகுதி முதியோர்களுக்கு மிகவும் பயனுள்ள அமைந்ததாக சமூக ஆர்வலர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

