மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வித் துறையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவருமான கந்தசாமி பிரபுவின் தலைமையில், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜின் பங்குபற்றுதலுடன் இன்று(10) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

 

தேசிய ரீதியில் கல்வித் துறையை மேம்படுத்தி அபிவிருத்தி செய்வதற்கான செயற்திட்டம் பிரதமர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

அதன் ஒரு பகுதியாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வித் துறையை மேலும் வலுப்படுத்துவதற்கான இக்கலந்துரையாடல் துறைசார் நிபுணர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

 

இதன்போது மாவட்டத்தின் கல்வித் துறையில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.

 

குறிப்பாக, மாவட்டத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன், எதிர்வரும் ஆண்டில் கணிசமான எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் ஓய்வுபெறவுள்ளமை கல்வித் துறைக்கு மேலும் சவாலாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டது.

 

அத்துடன், கல்வித் தரத்தை உயர்த்துதல், ஆசிரியர் வளங்களை வலுப்படுத்துதல், கல்வி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

 

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி எஸ்.ஆர். ஹசந்தி, திட்டமிடல் பணிப்பாளர் வி.நவநிதன், பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், திறந்த பல்கலைக்கழக பிரதிநிதிகள், உயர்கல்வி நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் கல்வித் துறையுடன் தொடர்புடைய பல்வேறு அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *