இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று(10) காலமானார்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம்வந்த பாரதிராஜா, சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இயக்குநர் பாரதிராஜா காலமானார்.
கடந்தாண்டு அவரது மகன் மனோஜ் மறைந்த நிலையில், அத்துயரிலிருந்து மீளாத பாரதிராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தபோதிலும், அவ்வபோது சில படங்களிலும் நடித்து வந்தார்.
1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, கிராமிய பின்னணியில் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரையுலகில் தனக்கென தனித்த அடையாளத்தை உருவாக்கினார்.
கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, கருத்தம்மா உள்ளிட்ட படங்கள், தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க படைப்புகளாக கருதப்படுகின்றன.

