டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் கிரான் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சிவலக்ஸன் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் பங்கேற்புடன் இன்று (26) இடம் பெற்றது.
டெங்கு நோய் அதிகம் பரவும் 14 மாவட்டங்களுள் மட்டக்களப்பு மாவட்டமும் அடையாளம் காணப்பட்டு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு மாவட்டத்தில் சந்திவெளி பிரதேசத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதனை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தின் விசேட பணிப்புரைக்கு அமைவாக அரச உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தி நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் அகற்றப்பட்டன.
இதன்போது வீடுகள், வர்த்தக நிலையங்கள், வெற்றுக் காணிகள், வடிகால்கள் உள்ளிட்ட பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டதுடன், நீர் தேங்கியுள்ள பாத்திரங்கள் மற்றும் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் அகற்றப்பட்டன.
இவ் நடவடிக்கையின் போது 20 நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன் சிவப்பு எச்சரிக்கைகளும் வழங்கப்பட்டன.
மாவட்டத்தில் நேற்றைய தினம் டெங்கு தாக்குதலினால் கர்ப்பிணி ஒருவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன், தேவையற்ற கழிவுகளை முறையாக அகற்றி, நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுத்து டெங்கு ஒழிப்பு பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் கிரான் சுகாதார வைத்திய அதிகாரி மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.
இந் நிகழ்வு கோறளைப்பற்று பிரதேச செயலாளர் நிருபா பிருந்தன், பிரதேச சபை உப தவிசாளர் குழந்தைவேல் பத்மநிதன், மக உதவி பிரதேச செயலாளர், 322 தொப்பிகலை படைப்பிரிவின் கப்டன் திலகரத்ன, இராணுவத்தினர், சுகாதார பரிசோதகர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிசார், பங்கேற்புடன் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

