யக்கல நாமல் போதைப்பொருள் விநியோகம் – இருவர் கைது

நாவலப்பிட்டி, கினிகத்தேனை, கம்பளை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருட்களை விநியோகிக்கும் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 38 வயதுடைய ஒருவரும், அவரது உதவியாளரும் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செயலி ஒன்றின் மூலம் வாடகை முச்சக்கர வண்டி சாரதியாக செயற்பட்டு வந்த குறித்த நபர்,’யக்கல நாமல்’ என அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரிடமிருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களைப் பெற்று பல பகுதிகளுக்கு விநியோகித்து வந்ததாக கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டி ஜயசுந்தர வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டை சோதனையிட்டபோது, அங்கு மீதமிருந்த 2,450 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குறிப்பிட்ட இடங்களில் போதைப்பொருட்களை விநியோகிக்க உதவியதாகக் கூறப்படும் 27 வயதுடைய இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் நாவலப்பிட்டி பகுதிக்கு போதைப்பொருட்களை வழங்கியதாகக் கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்ட பின்னர், குறித்த சந்தேகநபர் முச்சக்கர வண்டி சாரதி போல் நடித்து இந்த போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளில், மூன்று நாட்களுக்கு ஒருமுறை கொழும்பு பகுதிக்குச் சென்று போதைப்பொருட்களைப் பெற்று, அவற்றை விநியோகிக்கும் நபர்களிடம் ஒப்படைத்து வந்துள்ளதாகவும், ஒவ்வொரு பயணத்திற்கும் குறித்த செயலி வாடகைக் கட்டணத்திற்கு மேலதிகமாக ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை பணம் பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *