அரசாங்கத்திற்கு 158 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்தும் வகையில் ஊழல் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், காணி உரித்து நிர்ணய திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் (விசாரணைகள்) இன்று (29) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் காணி உரித்து நிர்ணய திணைக்களத்தின் ஆணையாளர் (விசாரணைகள்) பதவியில் பணியாற்றிய காலப்பகுதியில், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, நிறுவனத்தின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்புகளைப் பயன்படுத்தி, முறையான விசாரணை இலக்கம் இல்லாமல் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விசாரணை அறிக்கையின் மூலம், பொரளை, எலியட் வீதியில் வரிப்பண இலக்கம் 30இல் அமைந்துள்ள 1.0982 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட அரச காணி, தனியார் தரப்பினருக்குச் சொந்தமான காணி எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த காணியின் சந்தை பெறுமதி 1,586,000,000 ரூபாய் (158 கோடி 60 இலட்சம் ரூபாய்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசாங்கத்திற்கு பாரிய நிதி இழப்பை ஏற்படுத்தி, மற்றொரு தரப்பினருக்கு முறையற்ற நன்மையை வழங்கியதாக முன்னாள் ஆணையாளருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

