பொலன்னறுவை, கல்தம்பராவ, நிஸ்ஸங்கமல்லபுர பகுதியில் 31 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மாயமான முறையில் உயிரிழந்துள்ளார்.
ஈஸ்வரகே தொன் தில்ஷான் மதுஷங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
உயிரிழந்தவரின் மனைவி தெரிவிக்கையில், நேற்று புதன்கிழமை (30) தனது கணவர் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய பின்னர் வீட்டிற்கு அருகில் வந்து தம்முடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் இரவில் வீட்டிற்கு வராத அவர், இன்று காலை வீட்டிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ள பிரதான வீதியில் காயங்களுடன் விழுந்து கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் கண்டுபிடிக்கப்பட்ட போது உயிரிழந்திருந்ததாக மனைவி மேலும் தெரிவித்துள்ளார்.
இது மது அருந்தும் போது இடம்பெற்ற கொலையா அல்லது வீதியில் விழுந்து கிடந்த போது ஏதேனும் வாகன விபத்தில் சிக்கி இடம்பெற்ற மரணமா எனப் பொலன்னறுவை பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

