இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஈழத்தமிழர்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக இலங்கைக்கு நாடுகடத்தும் நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் உடனடியாகக் கைவிட வேண்டும் என திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சி.ஏ. சத்யா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வியாழக்கிழமை (29) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிங்கள பேரினவாத அரசின் இனப்படுகொலை, காணாமலாக்கப்படுதல் உள்ளிட்ட பல்வேறு துயரங்களுக்கு முகங்கொடுத்த ஈழத்தமிழர்கள், தமது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள தமிழகத்திலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஏதிலிகளாகத் தஞ்சமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்கள் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் நீதிமன்றத் தண்டனையின்றி நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்படுவது மனிதாபிமானமற்ற செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, 2016ஆம் ஆண்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழர் கிருஷ்ணகுமார் அவரது விருப்பத்திற்கு மாறாக இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டமை தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ள அவர், தற்போது சுபாஸ்கரன் என்பவரையும் நாடுகடத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், 1987ஆம் ஆண்டு இந்திய – இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 17 பேரின் சம்பவத்தையும் நினைவுபடுத்தியுள்ளார்.
ஈழத்தமிழர்களின் வரலாற்றுத் துயரங்களையும் இந்தியாவின் கடந்தகால நடவடிக்கைகளையும் கருத்திற்கொண்டு, அவர்களை விருப்பத்திற்கு மாறாக வெளியேற்றும் முயற்சிகளைக் கைவிட வேண்டும் எனவும், இவ்விடயத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசும் உடனடியாகத் தலையிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளைத் தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார்.

