வாழ்நாள் முழுவதும் எழுத்தே நண்பன்: ஆலையடிவேம்பு பொது நூலகத்தில் வாசிப்பு முகாம்

தேசிய வாசிப்பு மாதம் – 2026 நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, “வாழ்நாள் முழுவதும் எழுத்தே நண்பன்” எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச சபையின் கீழ் இயங்கும் ஆலையடிவேம்பு பொது நூலகத்தில் வாசிப்பு முகாம் இன்று (30) வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளர் ஆரியதாச தர்மதாச தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச சபைச் செயலாளர் எஸ். திவாகரன், ரேணுகா வரகுணநாதன்,(CDO) ஏ.சி.எல்.சி அம்பாறை , நூலகர் ஏ.எல். ஹம்துனா உள்ளிட்ட பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு கோட்டப் பாடசாலைகளான கமு/திகோ விவேகானந்தா வித்தியாலயம், அன்னை சாரதா வித்தியாலயம், திருநாவுக்கரசு வித்தியாலயம் மற்றும் திருவள்ளுவர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாசிப்பு முகாமில் பங்கேற்றனர்.

இதன்போது மாணவர்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, நூல்களைப் பார்வையிடுதல், வாசிப்பதற்கென நேரம் ஒதுக்கி நூல்களை வாசித்தல், வாசித்தவற்றைக் கிரகித்தல், அவை தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்தல் மற்றும் கதை சொல்லுதல் போன்ற பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதன் மூலம் மாணவர்களின் வாசிப்புத் திறன், வாசித்தவற்றைப் புரிந்துகொள்ளும் ஆற்றல், சிந்தனைத் திறன் மற்றும் கற்பனைத் திறனை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

மேலும், வாசிப்பு முகாமில் கலந்துொண்ட மாணவர்கள் நூல்கள் தொடர்பான தகவல்களை அறிந்துகொண்டதுடன், நூலக அங்கத்தவர் சேர்ப்பு மற்றும் மீளிணைப்பு நடவடிக்கைகள் ஊடாகப் புதிய உறுப்பினர்களை இணைத்தல், ஏற்கனவே அங்கத்துவம் பெற்றவர்களை மீண்டும் நூலகச் சேவைகளுடன் இணைத்தல் போன்ற பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.

மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தல், நூல்களின் முக்கியத்துவத்தை உணர்த்துதல், அறிவுத் தேடலை விரிவுபடுத்துதல் மற்றும் இளம் தலைமுறையினரை நூலகப் பயன்பாட்டை நோக்கி ஈர்த்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *