எம்.பி. அருச்சுணா உள்ளிட்ட 6 பேர் மீதான வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 14க்கு ஒத்திவைப்பு!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறான பதிவுகளை வெளியிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. அருச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ஹரீஸ் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிரான வழக்கின் இறுதித் தீர்ப்பு எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

 

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் குறித்த ஆறு பேருக்கும் எதிராக கடந்த செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து, கடந்த செப்டெம்பர் 28ஆம் திகதி, வைத்தியர் சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவதற்குத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

இந்நிலையில், குறித்த வழக்கு இன்று திங்கட்கிழமை (16) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இரா. அருச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ஹரீஸ் உள்ளிட்ட நால்வர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

 

இரு தரப்பு சட்டத்தரணிகளின் முன்னிலையிலும் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, வழக்கின் இறுதித் தீர்ப்பை எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி வழங்குவதற்குத் திகதியிட்டு, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *