சீதுவ, லியனகேமுல்ல பகுதியில் அமைந்துள்ள சமூக சேவைகள் திணைக்களத்திற்குச் சொந்தமான தொழிற்பயிற்சி நிறுவனத்தின் ஆண்கள் மாணவர் விடுதியில் நேற்று வியாழக்கிழமை (19) பிற்பகல் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து குறித்துத் தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த நீர்கொழும்பு தீயணைப்புப் பிரிவின் அதிகாரிகள், உடனடியாகச் செயற்பட்டு தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
தீ பரவிய நேரத்தில் குறித்த விடுதி அறையில் மாணவர்கள் எவரும் தங்கியிருக்காததால், அதிர்ஷ்டவசமாக எவருக்கும் எவ்வித உயிர்ச்சேதமோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை.
எனினும், இந்தத் தீ விபத்தினால் விடுதியின் கூரை, மாணவர்களின் கட்டில்கள் மற்றும் அங்கிருந்த விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல சொத்துக்களுக்குக் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.
மின் கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
