பிரித்தானியாவில் சிசிலியா மகளிர் கல்லூரியின் 150ஆவது ஆண்டு விழா!

மட்டக்களப்பின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான புனித சிசிலியா பெண்கள் பாடசாலையின் 150ஆவது ஆண்டு நிறைவு விழா, பிரித்தானியாவில் பழைய மாணவிகளின் பெருந்திரளான பங்கேற்புடன் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலை பழைய மாணவிகள் சங்கத்தின் பிரித்தானியக் கிளை ஏற்பாடு செய்திருந்த இவ்விழா, சங்கத்தின் தலைவி பிரியா அருள்தேவராஜா தலைமையில் நேற்று (21.11.2026) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரித்தானியாவில் வசிக்கும் ஏராளமான பழைய மாணவிகள் கலந்துகொண்டு, தமது தாய்ப் பாடசாலையின் ஒன்றரை நூற்றாண்டுகால கல்விப் பயணத்தையும் வரலாற்றுச் சிறப்புகளையும் நினைவுகூர்ந்தனர்.

விழாவின் பிரதம விருந்தினராகப் பிரித்தானியாவின் பிரபல தொழிலதிபர் கெனடி சபாபதி கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.

1876ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்கு வருகை தந்த கத்தோலிக்க மதகுருவான அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர் அவர்களால் நிறுவப்பட்டதாகக் குறிப்பிடப்படும் இப்பாடசாலை, கிழக்கு மாகாணத்தின் பெண்கள் கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றது.

இனம், மதம் என்ற வேறுபாடுகளைக் கடந்து, மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு கடந்த 150 ஆண்டுகளாகக் கல்வி வழங்கி வரும் இப்பாடசாலை, பல தலைமுறைப் பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் சமூக மேம்பாட்டிற்கும் அடித்தளமாக விளங்கி வருகின்றது.

இந்நிலையில், பாடசாலையின் 150ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதுடன் மட்டும் நின்றுவிடாமல், தமது தாய்ப் பாடசாலையின் எதிர்காலக் கல்வி வளர்ச்சிக்கும் பங்களிக்கும் வகையில் பிரித்தானிய பழைய மாணவிகள் சங்கம் பல்வேறு ஆக்கபூர்வமான செயற்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது.

பிரித்தானியாவில் நடைபெற்ற இவ்விழா, புனித சிசிலியா பெண்கள் பாடசாலையின் நீண்டகாலக் கல்விப் பாரம்பரியத்தையும் பழைய மாணவிகளுக்கும் தாய்ப் பாடசாலைக்கும் இடையிலான உறவையும் மீண்டும் பறைசாற்றும் நிகழ்வாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *