காதலனுக்காகத் தாயின் தாலியைத் திருடிய 22 வயது யுவதி கைது!

மட்டக்களப்பில் காதலனுக்காகத் தனது தாயின் 8½ பவுண் தாலிக்கொடியைத் திருடி, அதனை அடகு வைத்து 14 இலட்சம் ரூபாவைப் பெற்றுக்கொடுத்ததுடன், திருட்டுப் பழியை உறவினரான பெண் ஒருவர் மீது சுமத்தி அவரைக் கைது செய்ய வைத்ததாகக் கூறப்படும் 22 வயதுடைய யுவதி ஒருவர் நான்கு மாதங்களின் பின்னர் இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் வங்கியொன்றில் பணியாற்றும் குறித்த யுவதியை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து கடந்த ஜூன் மாதம் 28ஆம் திகதி தாலிக்கொடி திருடப்பட்டுள்ளதாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸாரிடம், வீட்டிற்கு அடிக்கடி வருகை தரும் உறவினரான பெண் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக வீட்டார் தெரிவித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் குறித்த உறவினரான பெண்ணைப் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். எனினும், அவரிடமிருந்து திருடப்பட்ட தாலிக்கொடி மீட்கப்படாத நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட குறித்த பெண் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், தாலிக்கொடியைத் திருடியதாகக் கூறப்படும் வீட்டின் 22 வயதுடைய மகளே இந்தத் திருட்டுச் சம்பவத்தை அரங்கேற்றி, உறவினரான பெண் மீது பழியைச் சுமத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, தனியார் வங்கியில் பணியாற்றும் குறித்த யுவதியைப் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *