மல்வத்தை இராணுவ முகாமின் 13ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நாட்டில் அமைதி நிலவவும், இராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் வேண்டியும் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட தூஆப் பிரார்த்தனை இன்று (23) சம்மாந்துறை பத்ர் ஹிஜ்ரா ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.
சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் தலைவர் மீராலெவ்வை அப்துல் மஜீட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மல்வத்தை 24ஆம் படைப்பிரிவின் ஜெனரல் எஸ்.பி. சுமல் விக்ரமசேகர பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இதன்போது, நாட்டில் அமைதி நிலவுவதுடன், இராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என இறைவனிடம் வேண்டி விசேட தூஆப் பிரார்த்தனை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷுறாவின் அமீர் ஐ. அப்துல் ஜப்பார், சம்மாந்துறை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எல்.எம். ரிஸ்வான் (முப்தி), மல்வத்தை இராணுவ முகாமின் உயர் அதிகாரிகள், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, மஜ்லிஸ் அஷ்ஷுறா மற்றும் ஜம்இய்யத்துல் உலமா சபை உறுப்பினர்கள், ஹிஜ்றா ஜிம்ஆ பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள், இராணுவச் சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

