இந்தியா – இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை!

இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையிலான நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், இரு நாடுகளின் அதிகாரிகள் மட்டத்திலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 2027 ஜனவரி 22ஆம் திகதி புதுடில்லியில் நடைபெறவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இந்திய – இலங்கை கடற்றொழில் தொடர்பான கூட்டுச் செயற்குழு கூட்டமாக நடைபெறவுள்ள இப்பேச்சுவார்த்தையில், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைதல், தடைசெய்யப்பட்ட இழுவைமடி மீன்பிடி முறையைப் பயன்படுத்துதல் மற்றும் இதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம், கடல் வளங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராயப்படவுள்ளது.

இப்பேச்சுவார்த்தையில் இலங்கை கடற்றொழில் அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவினர், கடற்றொழில் திணைக்களம், கடற்படை, பொலிஸ், கடலோரக் காவல்படை, NARA, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றை எட்டுவதற்காக இராஜதந்திர மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *