சம்மாந்துறை ஹிலால் பள்ளிவாசல் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்த தீர்மானங்கள்!

சம்மாந்துறை ஹிலால் ஜும்ஆ பள்ளிவாசலை அண்மித்த குடியிருப்புப் பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் போதைப்பொருள் பாவனை, சமூக விரோதச் செயற்பாடுகள் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆறு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

அம்பாறை – மட்டக்களப்பு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் பங்கேற்புடன் இன்று (27) வெள்ளிக்கிழமை ஹிலால் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

வீரமுனை 04 சிவில் பாதுகாப்புக் குழுவின் தலைவர் எம்.எம். முஹம்மட் அலி தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், குறித்த பகுதியில் சுமார் ஐந்து ஆண்டுகளாக இரவு நேரங்களில் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட சமூக விரோதச் செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும், பராமரிப்பற்ற காணிகள் பற்றைக்காடுகளாக மாறியுள்ளதால் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டினர்.

இதனையடுத்து, கைவிடப்பட்ட வீடுகள் மற்றும் காணிகளைப் பராமரிக்க குடும்பப் பிரதிநிதிகளை நியமித்தல், வாடகை வீடுகளில் வசிக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட வெளியிடங்களைச் சேர்ந்தவர்களின் விபரங்களைப் பொலிஸார் பதிவு செய்தல், வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் பொலிஸாரும் சிவில் பாதுகாப்புக் குழுவினரும் இணைந்து பகல் மற்றும் இரவு நேர ரோந்துப் பணிகளில் ஈடுபடுதல் ஆகிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

அத்துடன், பற்றைக்காடுகள் மற்றும் பராமரிப்பற்ற காணிகளைத் துப்புரவு செய்தல், கட்டாக்காலி மாடுகளைக் கட்டுப்படுத்துதல், வீதிகளில் வேகத்தடைகளை அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் பொலிஸ் உயர் அதிகாரிகள், சம்மாந்துறை பிரதேச செயலாளர், பிரதேச சபைத் தவிசாளர், வைத்தியசாலை நிர்வாகத்தினர், அரச திணைக்கள அதிகாரிகள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், குறித்த பகுதியில் நிலவும் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் இந்தத் தீர்மானங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *