பழமையான அரச கல்லறை கண்டுபிடிப்பு!

எகிப்தில் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அடித்தளத்தின் அளவும் அமைப்பும் இது ஒரு பெரிய, உயரமான கட்டமைப்பைத் தாங்கியிருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.

பண்டைய அலெக்ஸாண்ட்ரியாவின் அரச பகுதியாக விளங்கிய ஷல்லாலத் பூங்காவில் இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.

அலெக்ஸாண்ட்ரிய நாகரிகத்திற்கான ஹெலனிக் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த கிரேக்கத் தொல்லியல் குழு, தொல்லியலாளர் கலியோப் லிம்னியோஸ்-பாபாகோஸ்டா தலைமையில் இந்த அகழாய்வை மேற்கொண்டது. நவம்பர் 24 அன்று எகிப்தின் சுற்றுலா மற்றும் தொல்லியல் அமைச்சகம் இந்தத் தகவல்களை வெளியிட்டது.

நிலத்தடி நீர் கசிவு மற்றும் நவீன நகர்ப்புற அடுக்குகள் காரணமாகத் தோண்டும் பணி சவாலாக இருந்தாலும், பூங்காவின் அடியில் முக்கியக் கட்டமைப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பெரிய சுண்ணாம்புக் கற்களால் ஆன சதுர அடித்தளம், கட்டமைப்பின் கீழ் வடக்கு நோக்கிச் செல்லும் சுரங்கப்பாதை மற்றும் அதைச் சுற்றியுள்ள சுவர் ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன.

அடித்தளத்தின் அளவும் அமைப்பும் இது ஒரு பெரிய, உயரமான கட்டமைப்பைத் தாங்கியிருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆட்சி செய்த நான்காம் தாலமி பிலோபேட்டர் காலத்து அரச கல்லறையுடன் இதற்குத் தொடர்பிருக்கலாம் என்ற கருத்தை நிபுணர்கள் முன்வைத்துள்ளனர்.

அலெக்ஸாண்ட்ரியாவின் அரண்மனைப் பகுதியில் இருந்த அரச அடக்க வளாகமான செமா குறித்துப் பண்டைய கிரேக்கப் புவியியலாளரும் வரலாற்றாசிரியருமான ஸ்ட்ராபோ விவரித்துள்ளார்.

இந்த எச்சங்களை நான்காம் தாலமியின் கல்லறையுடன் இணைப்பது ஒரு ஆரம்பக்கட்ட அனுமானம் மட்டுமே என்றும், இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *