நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவும் அதிக மழைப்பொழிவுக்கு எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம் தாக்கம் செலுத்தியுள்ளதாகவும், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை குறையக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்கள வானிலை ஆய்வாளர் மாலித் பெர்னாண்டோ தெரிவிக்கையில், கடந்த சில மாதங்களாக எல் நினோவின் தாக்கம் காரணமாக முந்தைய ஆண்டுகளை விட அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகியுள்ள நிலையில், எல் நினோவின் தாக்கத்தில் மாற்றம் ஏற்படக்கூடும் எனவும், 2027 ஜனவரி மாத தொடக்கத்திலிருந்து தீவின் பெரும்பாலான பகுதிகளில் மழைப்பொழிவு கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது நிலவும் சராசரிக்கும் அதிகமான மழை நிலைமை டிசம்பர் மாத நடுப்பகுதி வரை தொடரக்கூடும் எனவும், அதன் பின்னர் மழைவீழ்ச்சி படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தற்போதைய கணிப்புகளின்படி எல் நினோ தாக்கம் 2027 ஏப்ரல் மாதம் வரை நீடிக்கக்கூடும் என்பதுடன், அந்தக் காலப்பகுதியில் இலங்கை முழுவதும் மழைப்பொழிவு குறைவாகக் காணப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

