இளைஞர்களிடையே நல்லிணக்கத்தினையும் சகவாழ்வினையும் மேம்படுத்தி, கிழக்கு மற்றும் மேற்கு மாகாணங்களுக்கிடையே சகோதரத்துவ உறவுப் பாலத்தினைக் கட்டியெழுப்பும் நோக்கிலான விசேட இளைஞர் பரிமாற்று நட்புறவு வேலைத்திட்டம் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு இளைஞர் பயிற்சி நிலையத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
நேற்று (28.11.2026) ஆரம்பமான இந்தப் பரிமாற்றுத் திட்டம், எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி (03.12.2026) வரை ஆறு நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இதில் மகரகம இளைஞர் பயிற்சி நிலைய மாணவர்களும், மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு இளைஞர் பயிற்சி நிலைய மாணவர்களும் இணைந்து பங்கேற்கின்றனர்.
இந்த ஆறு நாட்களும் மகரகமவிலிருந்து வருகை தந்துள்ள சகோதர இன இளைஞர், யுவதிகள் புதுக்குடியிருப்பு கிராமம் மற்றும் அங்குள்ள பயிற்சி நிலைய மாணவர்களின் வீடுகளில் தங்கியிருக்கவுள்ளனர். இதன் மூலம் கிழக்குப் பிரதேச மக்களின் கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வாழ்வியல் முறைகளை நேரடியாக அறிந்து கொள்வதுடன், இனங்களுக்கிடையிலான சகோதரத்துவத்தை வலுப்படுத்தவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு இளைஞர் பயிற்சி நிலையப் பொறுப்பதிகாரி கிஸ்கந்த முதலி தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் நிசாந்தி அருள்மொழி, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான சசிக்குமார் மற்றும் தயாசீலன், மாவட்ட நிஸ்கோ (NYSCO) முகாமையாளர் அருளானந்தம், இளைஞர் சேவை அதிகாரிகள், புதுக்குடியிருப்பு ஸ்ரீ விக்கினேஸ்வரர் கண்ணகி அம்பாள் ஆலய பரிபாலன சபையினர், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், இளைஞர் கழக அங்கத்தவர்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

