இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தனித்துவமான அரசியல் அடையாளத்தையும் உரிமைகளையும் முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தனது 40 ஆண்டுகால அரசியல் பயணத்தை இன்று நிறைவு செய்கிறது.
1986ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி எம்.எச்.எம். அஷ்ரஃப் தலைமையில் மறுசீரமைக்கப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்ட இக்கட்சி, சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றது.
1988ஆம் ஆண்டு 15ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக தேர்தல் வெட்டுப்புள்ளி 12.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டதில் கட்சியின் அரசியல் பேச்சுவார்த்தைகளும் முக்கிய பங்காற்றின. இதனைத் தொடர்ந்து 1989ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் நான்கு ஆசனங்களைப் பெற்று நாடாளுமன்றத்தில் தனது பலத்தை நிரூபித்தது.
1994ஆம் ஆண்டு அரசியல் சூழலில் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்த முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம் மக்களின் காணி உரிமை, பாதுகாப்பு மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட விடயங்களிலும் குரல் கொடுத்து வந்தது.
எனினும், 2000ஆம் ஆண்டு கட்சியின் நிறுவனர் எம்.எச்.எம். அஷ்ரஃப் மறைந்ததைத் தொடர்ந்து உட்கட்சி முரண்பாடுகளும் அரசியல் பிளவுகளும் கட்சியின் பயணத்தில் சவால்களாக அமைந்தன. பின்னர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சி தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
2018ஆம் ஆண்டு திகன வன்முறைகள், 2019 ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னரான சூழல், கொவிட் கால ஜனாஸா தகனம் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பிரச்சினைகளிலும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் தொடர்பாகக் கட்சி தனது நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளது.
இதேவேளை, இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, சமத்துவம் மற்றும் தேசிய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொள்கைகளையும் கட்சி முன்னிறுத்தி வருகிறது.
இந்நிலையில், 40 ஆண்டுகால அரசியல் பயணத்தை நிறைவு செய்யும் இந்தத் தருணத்தில், கட்சியிலிருந்து பிரிந்து சென்ற சக்திகளை மீண்டும் ஒன்றிணைப்பதும், முஸ்லிம் சமூகத்தின் தனித்துவமான அரசியல் குரலைப் பாதுகாப்பதும் அவசியமானதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
கடந்த கால வெற்றிகள், தோல்விகள் மற்றும் அரசியல் சவால்களைப் பாடங்களாகக் கொண்டு, அடுத்த தலைமுறைக்கான வலுவான அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எதிர்காலப் பயணத்தில் முக்கிய சவாலாக அமைகிறது.

