மியான்மார் தாக்குதலில் 30 பேர் பலி!

மியான்மர் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் திருமண நிகழ்வு, பாடசாலை மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெற்கு ஷான் மாநிலத்தின் மோ பே (Moe Bye) கிராமத்தில் திருமண நிகழ்வு நடைபெற்ற இடத்தில் நேற்று (28) நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதற்கு முன்னதாக, மத்திய மியான்மரின் மக்வே பிராந்தியத்தில் உள்ள இன் யோன் கிராமத்தில் பள்ளி ஒன்றின் மீது வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் மாணவர்கள், இளம் துறவிகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட குறைந்தது 20 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை மியான்மரின் தேசிய ஒற்றுமை அரசாங்கம் (NUG) தெரிவித்துள்ளது.

மேலும், மேற்கு மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் உள்ள மிராக்-யூ நகரிலும் சனிக்கிழமை இரவு இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

குடியிருப்புப் பகுதியை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தப் பகுதி இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடும் அராகான் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும்.

2021ஆம் ஆண்டு ஆங் சான் சூகி தலைமையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இராணுவம் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, மியான்மரில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளதுடன், நாடு முழுவதும் தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

தேசிய ஒற்றுமை அரசாங்கம் மற்றும் பல்வேறு இன ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் இராணுவம் கிராமங்களை எரித்தும், தரைவழித் தாக்குதல்களை நடத்தியும் வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக மியான்மர் இனப்படுகொலை செய்ததாக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்த ஒரு வாரத்திற்குப் பின்னர் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

2017ஆம் ஆண்டு இராணுவத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், 7 இலட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா மக்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *