வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டிய ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம்!

தங்களது துறைமுகத்தின் ஊடாக இதுவரை கையாளப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 50 இலட்சம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக நிர்வாகம் அறிவித்துள்ளது.

துறைமுகத்தின் வாகன மீள் ஏற்றுமதி (Transshipment) நடவடிக்கைகளில் இதுவொரு முக்கிய சாதனையாகப் பதிவாகியுள்ளது.

வாகனக் கையாளுகை மற்றும் களஞ்சியப்படுத்தல் கொள்ளளவை மேலும் அதிகரிக்கும் நோக்கில், பிரத்தியேகமான வாகனக் கப்பல் இறங்குதுறை ஒன்றையும் புதிய வாகனத் தரிப்பிட வளாகம் ஒன்றையும் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் புதிய உட்கட்டமைப்பு வசதிகள் ஊடாகத் துறைமுகத்தின் செயற்திறனை மேம்படுத்தவும், சர்வதேச வாகனப் போக்குவரத்துக் கப்பல் நிறுவனங்களின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2024ஆம் ஆண்டில் 579,362 வாகனங்களைக் கையாண்ட ஹம்பாந்தோட்டை துறைமுகம், 2025ஆம் ஆண்டில் 726,153 வாகனங்களைக் கையாண்டுள்ளது.

இது 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 146,791 வாகனங்களால் (25.3%) அதிகரிப்பாகும். மேலும், 2026 ஜூலை மாதத்தில் மாத்திரம் 104,620 வாகனங்கள் கையாளப்பட்டு, ஒரு மாதத்திற்குள் பதிவான அதிகபட்ச வாகனக் கையாளுகை என்ற சாதனையும் நிலைநாட்டப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழுமத்தின் கீழ் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட போது, வருடாந்தம் சுமார் ஒரு இலட்சம் (100,000) வாகனங்களே கையாளப்பட்ட நிலையில், தற்போது அது பாரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. துறைமுக விரிவாக்கத்தின் இரண்டாம் கட்டத்தின் முதற்படியாக, கடந்த மார்ச் மாதம் ஆறு ஹெக்டேயர் பரப்பளவிலான புதிய வாகனத் தரிப்பிட வளாகம் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது.

அத்துடன், கடந்த மே மாதம் முதல் ‘CASCADIA’ மற்றும் ‘UGR’ ஆகிய நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய புதிய வாகனப் போக்குவரத்துச் சேவைகள் மூலம் துறைமுகத்தின் சர்வதேசக் கப்பல் வலையமைப்பு மேலும் விரிவடைந்துள்ளது.

ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா ஆகிய பிராந்தியங்களுக்கு இடையிலான சர்வதேச வாகனப் போக்குவரத்தின் பிரதான மீள்ஏற்றுமதி மத்திய நிலையமாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைத் தொடர்ந்தும் அபிவிருத்தி செய்வதே தமது இலக்கு எனத் துறைமுக நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *