உலக மரபுரிமை சின்னமான காலி கோட்டையில் 21.8 பேர்ச்சஸ் அரசாங்க காணி 17 துண்டுகளாக தனியார் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டிருந்த போதிலும், அக்காணிகளின் உரிமை மீண்டும் அரசாங்கத்திற்கோ அல்லது காலி மரபுரிமை மன்றத்திற்கோ கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை எனத் தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
அரச சொத்துக்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுத்து, அவற்றின் உரிமையை மீண்டும் அரசாங்கத்திற்கோ அல்லது காலி மரபுரிமை அமைப்பிற்கோ கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கணக்காய்வின் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் காலி கோட்டை வளாகத்தில் பல்வேறு அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான 15 பகுதி காணி பயனுள்ள பொருளாதார நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை எனவும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காலி மரபுரிமை மன்றத்தின் தலைவர் பேராசிரியர் தேவ மைக்கேல் டி சில்வாவிடம் நாம் வினவியபோது அவர் பின்வருமாறு தெரிவித்தார்:
காலி கோட்டைக்குள் அமைந்துள்ள அரச காணிகளைத் கையகப்படுத்துவதற்காக காலி மரபுரிமை மன்றத்தினால் தேவையான கடிதங்கள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எனினும் காணி உரித்து நிர்ணயத் திணைக்களம் மற்றும் கடுவத் சத்தர பிரதேச செயலகம் ஆகியன அதற்குப் பதிலளிப்பதில் ஏற்படும் தாமதம் காரணமாக இந்தச் செயன்முறை இன்னும் நிறைவடையவில்லை.
காலி மரபுரிமை மன்றத்தின் முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் 26 அரச நிறுவனங்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன.
அந்த நிறுவனங்களின் ஒத்துழைப்பு காலி மரபுரிமை மன்றத்திற்கு வழங்கப்பட வேண்டும்.
இக்காணிகளின் உரிமை மரபுரிமை மன்றத்திற்கு வழங்கப்படும்போது பயனற்றுக் காணப்படும் காணிகளைப் பயனுள்ள பொருளாதார நடவடிக்கைகளுக்காக எம்மால் பயன்படுத்த முடியும்.
அதற்கான திட்டங்களை நாம் வகுத்துள்ளோம் எனவும் காலி மரபுரிமை மன்றத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

