சுகயீனமுற்றிருந்த நிலையில் கடந்த 19 திகதி தனது 74 வது வயதில் ஓய்வுநிலை ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகை காலமானார்.
அவரின் திருவுடல் தன்னாமுனை தேவாலயத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்து, செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திற்கு கொண்டுவரப்பட்டு, அங்கு இரு தினங்களாக அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இரண்டு நாட்களும் பெருந்திரளான மக்கள் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில் நேற்று மாலை மட்டக்களப்பு மறை மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் அன்டன் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் இறுதி நாள்கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில் இலங்கையின் மறை மாவட்டங்களின் ஆயர்கள், சர்வ மதங்களின் குருமார்கள், அரசியல் பிரமுகர்கள், கிறிஸ்தவ அமைப்புகளின் பிரதிநிதிகள், மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றிய உறுப்பினர்கள், அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது மறைந்த ஓய்வு நிலை ஆயரின் ஆத்மா சாந்தி வேண்டி விசேட பிரார்த்தனை வழிபாடுகளும் இங்கு இடம்பெற்றன. அன்னாரின் ஆன்மீகப் பணிகள் மற்றும் பொதுப்பணிகள் தொடர்பில் அங்கு நடைபெற்ற இரங்கல் உரையின்போது பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
இறுதி அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில் விசேட வழிபாடுகளுடன் மக்களின் கண்ணீருக்கு மத்தியில் மறைந்த ஓய்வு நிலை ஆயரின் திருவுடல் புனித மரியாள் பேராலயத்தின் பீடப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.





