மக்கள் மீண்டும் இன ரீதியாகப் பிளவுபடுவதற்கு இடமளிக்க வேண்டாம் என இலங்கைக்கான கனடா தூதுவரிடம், அமைச்சர் சந்திரசேகர் விசேட வேண்டுகோளொன்றை முன்வைத்துள்ளார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான கனடா எரிக் வால்ஷ் ஆகியோருக்கிடையில் நேற்று(21) கொழும்பிலுள்ள அமைச்சில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போதே இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.
இலங்கையின் மீனவ சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் முக்கியமாக வடக்கு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.
அபிவிருத்தியில் பின்தங்கிய சமூகமாக வாழும் வடக்கு மக்களின் நிலை குறித்து இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், 30 வருட கால யுத்தத்திற்குப் பின்னரும் வடக்கு மக்கள் இன்னும் முறையான கவனம் செலுத்தப்படாமல் வாழ்ந்து கொண்டிருப்பதாக வலியுறுத்தினார்.
கடந்த கால அரசுகள் தமிழ் மக்களைப் பெரும்பாலும் புறக்கணித்ததாகவும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்தப் பாகுபாடுமின்றி அந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பாரிய அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்த உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஊழல், மோசடி மற்றும் இனவாதம் அற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.
வடக்கில் உள்ள பல சமூகங்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வதாகவும், பெற்றோரை இழந்த பிள்ளைகள், விதவைகள் மற்றும் பல முதியோர் ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்ப அரசாங்கம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தூதுவரிடம் குறிப்பிட்டார்.
எந்த வடிவத்திலும் இனவாதத்திற்கு இனி இடமளிக்கப்பட மாட்டாது என அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் குழப்ப மீண்டும் இனவாதப் பிரிவுகளைத் தூண்டிவிட உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சில தீய சக்திகள் முயற்சிப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.
மக்களை மீண்டும் இனரீதியாகப் பிளவுபடுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இடமளிக்க வேண்டாம் எனவும் கனடா தூதுவரிடம், அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு கனடாவின் முழு ஆதரவை வழங்குவதாகக் கனடா தூதுவர் இதன்போது உறுதியளித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற தேசிய படைவீரர்கள் தினத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையையும் தூதுவர் பாராட்டியுள்ளார்.