சச்சித்ர சேனாநாயக்கவுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சித்ர சேனாநாயக்கவுக்கு எதிராக சட்டமா அதிபர் அம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

2020ஆம் ஆண்டு இடம்பெற்ற லங்கா பிரீமியர் லீக் போட்டியின் போது ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுவதற்காக கிரிக்கெட் வீரர் தரிந்து ரத்னாயக்கவைத் தூண்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விளையாட்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், இந்த நாட்டில் தேசிய அளவிலான கிரிக்கெட் வீரர் ஒருவர் மீது ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படுவது இதுவே முதல் முறை என்று சட்டமா அதிபர் திணைக்கள பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தெற்காசியாவில் தேசிய அளவிலான கிரிக்கெட் வீரர் ஒருவர் மீது ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டின் பேரில் குற்றவியல் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுவது இதுவே முதல் முறை என்றும் அவர் குறிப்பிட்டார்.

2020 நவம்பர் 21 மற்றும் 22ஆம் திகதிக்கு இடையில் மொரிஷியஸ் மற்றும் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற கொழும்பு கிங்ஸ் அணிக்கான போட்டிகளை சூதாட்டத்திற்கு உட்படுத்த மற்றொரு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவுக்கு தெரிவிக்க வேண்டாம் என்று தரிந்து ரத்நாயக்கவிடம் கோரியதாகவும், அவரை ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட தூண்டியதோடு, அறிவுறுத்தல் வழங்கியதாகவும் விளையாட்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சச்சித்ர சேனநாயக்க மீது சட்டமா அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *