உழவு இயந்திரத்தை கொண்டு கரைவலை இழுப்பதற்கு அனுமதி கோரி : ஆழியவளையில் முறுகல் நிலை

யாழ் வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க எல்லைக்குள் உழவு இயந்திரத்தை பாவித்து கரைவலை தொழில் புரிவது தடை செய்யப்பட்ட போதிலும் தொடர்ந்து உழவு இயந்திரத்தை பாவித்து நபர் ஒருவர் தொழில் புரிந்துவருவதால் அங்கு முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கடந்த 2024ம் ஆண்டு ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க எல்லைப் பகுதிக்குள் மனித வலுவற்று உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் புரிவது தடை செய்யப்பட்டு பொதுச்சபையாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பொதுச்சபையினதும், நீரியல்வள திணைக்களத்தினதும் சட்டதிட்டங்களை மீறி அப்பகுதியில் நபர் ஒருவர் தொடர்ந்து உழவு இயந்திரத்தை பாவித்து  கரைவலை தொழில் புரிவது மீனவர்கள் இடையே முறுகல் நிலை வருகின்றது.

பொதுச்சபையின் தீர்மானத்தை மீறி ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க நிர்வாகம் இரகசியமான முறையில் குறித்த கரைவலை சம்மாட்டிக்கு உழவு இயந்திரத்திற்கு அனுமதி பெற்றுக் கொடுப்பதற்காக நீரியல்வளத்திணைக்கள அதிகாரிக்கு கடிதம் எழுதியது அம்பலமாகியுள்ளது.

செயற்பாட்டில் இருந்த ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க செயலாளர் பதவியில் இருந்து விலகிச் சென்றதால் கடந்த பொதுச்சபை கூட்ட தீர்மானத்தில் செயலாளர் ஒருவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பாக எமது பிரதேச ஊடகவியலாளர் ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க செயலாளரை தொடர்பு கொண்டு வினவிய போது பொதுச்சபையின் தீர்மானத்தை மீறி கடிதம் அனுப்பப்பட்டமை உண்மை என நிர்வாகத்தின் நிர்ப்பந்தத்தால் சட்டத்தை மீறி கடிதம் அனுப்பியதாகவும் அக்கடிதத்தை இன்று திரும்ப பெறுவதாகவும் உறுதியளித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *