களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் கடந்த இரண்டு வருடங்களாக பழுதடைந்த நிலையில் காணப்பட்ட சலவை இயந்திரத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் மட்டக்களப்பு மருத்துவமனை நண்பர்கள் அறக்கட்டளை(Friends of Batticaloa Hospitals Charity) அமைப்பின் ஒருங்கிணைப்பில் கோவில்போரதீவைச் சேர்ந்த லண்டன் மாநகரில் வசிக்கும் பிரபல தொழிலதிபரான மார்க்கண்டு நேசராசாவின் நிதிப் பங்களிப்பில் அவர்களது குடும்ப உறவுகளினால் சுமார் 8.5மில்லியன் ரூபாய் பெறுமதியான கனரக தொழில்துறை சலவை இயந்திரம், அதன் பயன்பாட்டுக்கு உரிய சலவை நீர் மற்றும் கெமிக்கல்ஸ் என்பன கடந்த 12ம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
அந்த இயந்திரம் இன்று உத்தியோகப்பூர்வமாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டு பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
இதன் மூலம் படுவான் கரை மற்றும் எழுவான்கரை மக்களின் நீண்டகால வைத்திய சேவையின் ஒரு அத்தியாவசிய தேவை பூர்த்தி செய்யப்பட்டதாக வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
மேலும் கைங்கரியமிக்க வைத்தியசாலையின் தேவையினை பூர்த்தி செய்த சமூக சேவையாளர் மார்க்கண்டு நேசராசா மற்றும் அவர்களது குடும்பத்தினர் வைத்தியசாலை நிர்வாகத்தினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே. புவனேந்திரநாதன், வைத்தியசாலை நிர்வாகத்தினர், விஷேடவைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியபரிபாலகிகள், தாதியர்கள், அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், நன்கொடையாளர் குடும்ப உறவுகள், பொதுமக்கள் மற்றும் மட்டக்களப்பு மருத்துவமனை நண்பர்கள் அறக்கட்டளை(Friends of Batticaloa Hospitals Charity) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


