ஏறாவூர் நகர சபையின் விலங்கறுமனை, அதன் எல்லைக்குட்பட்ட மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும் கோழிக் கடைகள் தவிசாளரினால் இன்று(25) காலை திடீர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.
வெள்ளிக்கிழமைகளில் அதிகளவான நுகர்வோர்களால் இறைச்சிகள், உணவுப் பொருட்கள் கொள்வனவு செய்யப்படுவதால் மக்களின் சுகாதார நலனை கருத்திற்கொண்டு தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ். நழீம் மற்றும் உறுப்பினர் ஏ.எம். அஸ்மி ஆகியோர் இன்று காலை திடீர் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.
இதன்போது விலங்கறுமனையின் சுகாதார நிலமை, பராமரிப்பு
குறைபாடுகள் என்பன குறித்து
செயலாளர் எம்.எச்.எம். ஹமீம், பொது சுகாதார பரிசோதகர் எம். சுமைல், வருமானப் பரிசோதகர்கள், விலங்கறுமனை பொறுப்பாளர் ஆகியோருடன் தவிசாளரினால் மக்களின் நலனை முன்னிறுத்தி செய்யப்பட வேண்டிய அவசிய பணிகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன்
கால்நடைகளின் சுகாதார நிலை, மடுவம் அமைந்துள்ள பகுதியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அப்பகுதி மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்ளா வகையில் முறையான பராமரிப்பு என்பன குறித்து அங்கு தவிசாளர் தலைமையில் கள பரிசோதனை செய்யப்பட்டன.
அத்துடன் இதன் தொடர் பணியாக குறித்த உத்தியோகத்தர்கள் சகிதம் நகர சபை எல்லைப்பரப்பில் இறைச்சி விற்பனையில் ஈடுபடும் கடைகள் சில தவிசாளர் தலைமையில் திடீர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கோழி விற்பனை மேற்கொள்ளும் கடைகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதுடன், சுகாதார ஏற்பாடுகள், நிறை, விலை, வர்த்தக நிலைய பராமரிப்பு , வாடிக்கையாளர் நலன் என்பன விரிவாக இங்கு பரீட்சிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் ,
குறித்த விடயம் தொடர்பில் இறைச்சிக்கடைகளின் உரிமையாளர்கள் இன்று இரவு விசேட கலந்துரையாடல் ஒன்றிற்கும் அழைக்கப்பட்டுள்ளனர் .
ஏறாவூர் மக்களின் நலனையும், சுகாதாரத்தையும் மேம்படுத்தும் முகமாக மேற்படி பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுமென்பதில் தவிசாளர் உறுதியாகவுள்ளதுடன் இதில் முறையான பொறிமுறை பேணப்படாவிடின் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் முதல் பொறுப்பான அதிகாரிகள் வரை பாராபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என இவ்விஜயத்தின் போது தவிசாளரால் தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

