களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பெரியபோரதீவு தொலைத் தொடர்புக் கோபுரத்தில் இருந்த சுமார் 14 இலட்சம் ரூபா பெறுமதியான 44 பற்றரிகளை விற்பனை செய்தவர் மற்றும் அதனை வாங்கிக் கொண்ட சம்மாந்துறையைச் சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி ஆகிய இருவரை இன்று(01) காலையில் களவாஞ்சிக்குடி பகுதியில் வைத்து கைது செய்துள்ளதுடன் சிறிய ரக வாகனம் ஒன்றை மீட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தொலைத் தொடர்புக் கோபுரத்தில் இருந்த பற்றிகளை சம்பவதினமான இன்று அங்கு கடமையாற்றி வந்த ஒருவர் பழைய இரும்பு விற்பனை வர்த்தகர் ஒருவருக்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அந்த பற்றிகளை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வந்த நிலையில் களுவாஞ்சிக்குடி பகுதியில் வைத்து அந்த வாகனத்தை பொலிஸார் சுற்றிவளைத்து இடைமறித்து சோதனை மேற்கொண்ட போது திருடப்பட்ட பற்றிகளை எடுத்துச் செல்வதை கண்டுபிடித்ததையடுத்து அந்த வாகன சாரதியை கைது செய்ததுடன் வாகனம் ஒன்றையும் 44 பற்றிகளையும் மீட்டனர்.
அதேவேளை தொலைத் தொடர்புக் கோபுரத்தில் இருந்த பற்றிகளை திருட்டுத்தனமாக விற்பனை செய்த அங்கு கடமையாற்றி வந்த ஒருவரை கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணையின் பின்னர் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பெரும் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

