அம்பாறை மாவட்டத்தில் ஒசுசல கிளைகள் இல்லாத பிரதேசங்களுக்குப் புதிதாக ஒசுசல கிளைகளைத் திறப்பதற்கான செயற்பாடுகளை சுகாதார அமைச்சு மேற்கொள்வதுடன், நிந்தவூர் ஒசுசல கிளையினை வேறு இடத்திற்கு மாற்றும் செயற்பாட்டை நிறுத்துமாறு சுகாதார அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதார அமைச்சர் திரு. டொக்டர். நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இலங்கை மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டொக்டர் மனுஷ வீரசிங்க அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர் பிரதேசத்தில் அமைந்துள்ள பொருத்தமில்லாத இடத்தில் அமைந்துள்ளதாகவும், ஒரு நாளைக்கு 50க்கும் குறைவான வாடிக்கையாளர்கள் மட்டும் ஒசுசலைக்கு வருகை தருவதால் நிந்தவூர் பிரதேச ஒசுசல கிளையினை அம்பாறை மாவட்டத்தில் ஒசுசல கிளை இல்லாத பிரதேசத்திற்கு மாற்றம் செய்வதற்கான செயற்பாடுகளை இலங்கை மருந்தக கூட்டுத்தாபனம் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை நிந்தவூரில் அமைந்துள்ள ஒசுசல நிந்தவூருக்கு மற்றும் உரியதல்ல ஒலுவில், பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனை அதன் அருகிலுள்ள கிராம மக்களும் நன்மை அடைந்து வருகின்றனர். எனவே, நிந்தவூரில் அமைந்துள்ள ஒசுசல கிளை பொருத்தமான இடத்தில் அமையவில்லை என்றால் நிந்தவூரில் பொருத்தமான வேறு ஓர் இடத்தில் மாற்றுங்கள் நிந்தவூரில் அமைக்கப்பட்டுள்ள ஒசுசல கிளையினை வேறு இடத்திற்கு மாற்றும் செயற்பாடுகளை இடைநிறுத்திவிட்டு அம்பாறை மாவட்டத்தில் ஒசுசல இல்லாத பிரதேசங்களுக்கு புதிய ஒசுசக கிளைகளை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கோள்ள வேண்டும். கல்முனைப் பிரதேசத்தில் இதுவரையும் ஒசுசல கிளை இல்லாத நிலை தொடர்கிறது. கல்முனை ஒசுசல கிளைக்கான இடத்தினை அடையாளப்படுத்தி வழங்கியும் இதுவரை கல்முனை பிரதேச ஒசுசல கிளையினை திறப்பதற்கான செயற்பாடுகள் தாமதிக்கப்படுகிறது. இதனை திறப்பதற்கான ஏற்பாடுகளை விரிவுபடுத்த வேண்டும் என தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித் ஆகியோர் நிந்தவூரில் அமைந்துள்ள ஒசுசல கிளையினை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டாம் நிந்தவூருக்குள் பொருத்தமான இடத்திற்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்தனர். சுகாதார அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நிந்தவூர் ஒசுசல கிளையினை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதனை உடனடியாக நிறுத்தி நிந்தவூரில் பொருத்தமான இடத்தில் இயங்க வைக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு இலங்கை மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு பணிப்புரை வழங்கினார்.
கல்முனைப் பிரதேசத்திற்கான ஒசுசல கிளை மிக விரைவில் திறப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக இலங்கை மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் டொக்டர் மனுஷ வீரசிங்க தெரிவித்தார்.

